×

குளத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு எஸ்.வெள்ளாளபட்டி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கரூர், மார்ச் 27: கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாளபட்டி குளம் அருகே அரசு சார்பில் கட்ட முடிவு செய்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நிறுத்த வேண்டி இந்த பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் புலியூர் அடுத்து எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதி உள்ளது. புலியூரில் இருந்து இந்த பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பிரதான குளத்தின் அருகே அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என இந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதையும் மீறி பூமி பூஜை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் குளத்தின் அருகே பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். எங்கள் ஊர் குளத்தில் குடியிருப்பு கட்டும் பணியை நிறுத்தி வேறு இடத்துக்கு மாற்றுமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பிளக்ஸ் போர்டு ஒன்றை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளத்தின் அருகே வைத்தனர். நேற்று காலை சம்பவ இடத்துக்கு பசுபதிபாளையம் காவல் துறையினர் மற்றும் இந்த பகுதி விஏஒ ஆகியோர் சென்று அங்கிருந்து கூடியிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னை குறித்து நாளை (இன்று) ஆர்டிஒ தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் பிளக்ஸ் போர்டை அகற்றி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் நேற்று காலை இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : anti-S ,population ,village ,Vellalapatti ,pond ,government building ,
× RELATED கோடைகால பாதுகாப்பு