×

எங்களுக்கு பிரதான போட்டி தி.மு.க. தான் அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டனர் ஆண்டிபட்டி அ.ம.மு.க. வேட்பாளர் பேட்டி

ஆண்டிபட்டி, மார்ச் 27: எங்களுக்கு பிரதான போட்டி திமுகதான், அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டனர் என ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறினார்.
ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் நேற்று ஒரே நாளில் 16 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.ம.மு.க. சார்பில் ஜெயக்குமார், மாற்று வேட்பாளராக பழனி, தி.மு.க., சார்பில் மகாராஜன், நாம்தமிழர் கட்சி சார்பில் அருணாதேவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அழகர்சாமி மற்றும் 11 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் இதுவரை மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் அணிக்கு பொதுசின்னம் கிடைக்காத பட்சத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னம் கொடுத்தாலும், அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக எங்கள் அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் திகழ்வார்.

எங்களை பொறுத்தவரையில் நாங்கள் பிரதான போட்டியாக நினைப்பது தி.மு.கவைதான். அ.தி.மு.கவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அ.தி.மு.க ஆட்சி ஊழல்நிறைந்த ஆட்சி என்றும் மக்கள் தெரிந்து கொண்டனர். இதுதவிர மதவாத சக்தியுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவை ஆண்டிபட்டி தொகுதி மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர். ஆண்டிபட்டி தொகுதியில் நீண்ட நாளாக நிறைவேற்றப்படாத திப்பரேவு அணைத்திட்டம், லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிப்பட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வருவேன்’ என்றார்.

Tags : rival ,DMK ,AIADMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...