×

ஜெகதாப்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த பீடி சுருட்டு இலை பறிமுதல் ரூ.3 லட்சம் மதிப்புடையது

மணமேல்குடி, மார்ச் 27:  ஜெகதாப்பட்டினம் அருகே கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பீடி சுருட்டும் இலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  புதுக்கோட்டை  மாவட்ட கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு ஒருசில மீனவர்களால் பீடி சுருட்டும் இலை, பீடி, சிகரெட், கஞ்சா போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இலங்கையில் இருந்து தமிழக கடற்பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுக்க கடற்கரை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், சுங்கத்துறை, கடற்படை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பொருட்களை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில் ஜெகதாபட்டினம் அருகே உள்ள முத்தனேந்தல் கடற்கரையில் 10 மூடைகள் கேட்பாரற்று கிடந்தன. அதுகுறித்து பொதுமக்கள் ஜெகதாபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 10 மூடைகளிலும் பீடி சுருட்ட பயன்படுத்தப்படும் இலைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். உடனே போலீசார் அந்த மூடைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பீடி சுருட்டும் இலைகளை கடத்தும்போது, போலீசார் கடலில் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டதால், போலீசாருக்கு பயந்து கடற்கரையில் மூடைகளை கடத்தல்காரர்கள் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பீடி சுருட்டும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sri Lanka ,Jagadapattinam ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...