×

பூந்தமல்லி நகராட்சியில் செயல்படும் டாஸ்மாக்கை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு

பூந்தமல்லி, மார்ச் 22: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு எம்ஜிநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதாக இருந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் கடையை திறந்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்புகள் மிகுந்த இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
ஆனால் எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் கேட்க  தயாராக இல்லை. இந்த கடையால் தினமும் குடித்துவிட்டு குடிமகன்கள் நிர்வாணமாக சாலையில் விழுந்து கிடக்கிறார்கள்.

இந்த பகுதியில் பெண்கள் விடுதிகள் அதிகளவில் உள்ளன. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வரும் பெண்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த டாஸ்மாக் கடையை மூடவில்லை என்றால் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இந்தப் பகுதி மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

திமுக வேட்பாளர் வாக்குறுதி
இந்நிலையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட வந்தார். அப்போது அந்த பகுதி மக்கள் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், வெற்றி பெற்றதும் இந்த கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Poonamallee ,municipality ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு