×

மதுபானக்கூடமாக மாறிய பயணியர் விடுதி

திருப்போரூர், மார்ச் 21: திருப்போரூர் ரவுண்டானா அருகே, மதுபான கூடமாக மாறிய பயணியர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வட்டத் தலைமையிடமான திருப்போரூரில் ரவுண்டானா அருகே, பயணியர் விடுதி உள்ளது. இங்கு பொதுப்பணித் துறை அலுவலகம், வீராணம் அலுவலகம், பயணியர் விடுதி ஆகிய கட்டிடங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள பயணியர் விடுதியை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் பயணியர் விடுதி கட்டிடம் சீரழிந்து வருகிறது. கட்டிட வளாகத்தில் பட்டப்பகலில் சமூக விரோதிகள் அமர்ந்து சூதாட்டம் ஆடுதல், மது அருந்துதல் உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்களும், பயணியர் விடுதியை கடந்து செல்லும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் அச்சத்துடனே செல்கின்றனர்.

இங்கு ஒரு காவலாளி பணியில் இருந்தும், அவரை மிரட்டி இச்செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை பராமரிக்கும் பொதுப்பணித்துறை நிர்வாகம், இந்த செயல்களை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், பல்வேறு அதிகாரிகளும் திருப்போரூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருப்போரூர் பயணியர் விடுதியை சீரமைத்து சமூக விரோதிகளின் பிடியில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : guesthouse ,
× RELATED சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர்...