×
Saravana Stores

கோடை வெயிலை சமாளிக்க துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்

நாமக்கல், மார்ச் 15: கோடை காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றத்தினை கருத்தில் கொண்டு, துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட சித்த அலுவலர் தெரிவித்துள்ளார். கோடை காலம் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் தற்போது தொடங்கி உள்ளதால், வியர்வை  மூலம் உடலில் உள்ள நீர்சத்துகள், தாது உப்புகள் குறைகிறது. இதனால், உடல் சோர்வு, தலைவலி, கை, கால் வலி, குடைச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. கோடை வெயிலை சமாளிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ்செல்வன் கூறியது: கோடை வெயில் தொடங்கியுள்ளதால், அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரி, தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். வெள்ளரிக்காயில் கலோரி மிக குறைவு, நீர்சத்து அதிகம். பொட்டாசியம், மெக்னீசியம் இருப்பதால் உடல் சோர்வு குறையும். நாள்தோறும் காலை, மாலை என இருமுறை தலையோடு குளிக்க வேண்டும். மேலும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குறிப்பாக கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட  தைலங்களை பயன்படுத்துவதால் உடல் சூடு, கண் எரிச்சல் குறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். மேலும் உடலுக்கு சூட்டை தரக்கூடிய மசாலா, துரித மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை அடிக்கடி மாற்றுவதன் மூலம் சரும நோய்களை தவிர்க்க முடியும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தமிழ்செல்வன் கூறினார்.

Tags :
× RELATED பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு