×

நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு அதிகாரிகளிடம் ஆர்வம் குறைவு

திருவள்ளூர், மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் மார்ச் 10ம் தேதி அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கென நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள், பணியில் ஆர்வமின்றி இருப்பதால், தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுபவர்களை கண்காணிப்பதோடு, கிடைக்கப்பெறும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள்.
முக்கியமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்தில், ஆதாரம் இல்லாமல் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரத்து மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள மதுவகைகள், எரிசாராயம், கள்ளச்சாராயம் மற்றும் உரிமம் இல்லாத, உரிமம் பெற்ற ஆயுதங்கள், வெடி பொருட்களை கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்குழுவில் வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சித் துறையை சேர்ந்த அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமுறை மீறுவது குறித்து தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் தெரிவித்து, அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புள்ளியியல் தணிக்கை குழுவினர், வாகனங்களை தணிக்கை செய்து, அதில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டிருப்பின், அது தொடர்பான அறிக்கையை, தொகுதி தேர்தல் அலுவலருக்கும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர வீடியோ கண்காணிப்புக்குழு, புள்ளியியல்குழு, ஊடக ஆய்வுக்குழு ஆகியவை, பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மற்றும் அரசால் வெளியிடப்படும் விளம்பரம் குறித்து ஆய்வு செய்து, செலவுக்கணக்கு மற்றும் நடத்தை விதிமீறல் தொடர்பான அறிக்கை சமர்பிப்பர் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வளவு ஏற்பாடுகளை செய்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. களப்பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை கடந்த 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அன்று முதல் நேற்று வரை நான்கு நாட்களில் மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்த பறக்கும் படையினர், வாகனஆய்வு, புள்ளி விபரக்கணக்கு உள்ளிட்ட எந்த ஒரு குழுவும் அதிகபட்சத்தொகையை பறிமுதல் செய்யவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, திருவள்ளூரில் கடந்த நான்கு நாட்களில் பணிகள் மந்தமான நிலையில் உள்ளன.

மந்தநிலைக்கு காரணம் என்ன?
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு உயர் அதிகாரி கூறுகையில், ‘’பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது உண்மை. எந்த தகவலாக இருந்தாலும், கலெக்டருக்கும், மாவட்ட வருவாய் அலுவலருக்கும் தெரிவித்து, அவர்களிடமிருந்து பதில் வந்தபின்பே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனால், தாமதம் ஏற்படுகிறது. தேர்தல் பணியில் கண்காணிப்பு அலுவலர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்தால், பணிகள் மேலும் விறுவிறுப்படையும்’’ என்றார்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...