×

மக்களவை தேர்தல் வீடியோ, புகைப்பட பணி தனியாருக்கு வழங்க கூடாது சங்கத்தினர் கலெக்டரிடம் முறையீடு

திருச்சி, மார்ச் 12: தேர்தலையொட்டி புகைப்படங்கள், வீடியோ எடுக்கும் பணியை தனியாருக்கு வழங்க வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் முறையிட்டனர். மக்களவை தேர்தல் தேதி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து திருச்சி மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதற்காக போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் பணியில் அமர்த்த டெண்டர் கோரப்பட்டது. இதில், திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்கம் உள்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த பிப்ரவரி 25ம் தேதி டெண்டர் நடந்தது. தேர்தல் தாசில்தார் (பொ) தமிழ்கனி முன்னிலையில் நடந்த டெண்டரில், திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்கம் தகுதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓரிரு நாட்களிலேயே மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட உள்ளதாகவும், திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்க டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அச்சங்கத்தினர், இதுதொடர்பாக கலெக்டரிடம் முறையிட முடிவு செய்தனர்.

அதன்படி, திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்க தலைவர் பாலாஜி, செயலாளர் ராஜாராம், பொருளாளர் பாலமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டரிடம்  மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கோரிக்கை மனுவை மனுப்பெட்டியில் போடும்படியும், கோரிக்கைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் சிவராசு தெரிவித்தார். இதனால் மனுக்களை மனுப்பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிக்கும் வீடியோகிராபர்களை பணியில் அமர்த்த டெண்டர் விட்டுள்ளனர். இதில் எங்கள் சங்கத்தை முதலில் தேர்வு செய்ததாக கூறிவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தற்போது டெண்டர் வழங்க முடிவு செய்துள்ளனர். அந்த நிறுவனம் தகுதியில்லாதவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்து நாங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு பணியை வழங்காமல், திடீரென கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வழங்குவது கண்டிக்கத்தக்கது என்றனர்.

Tags : Lok Sabha ,Collector ,Association ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...