×

காலை 8 மணிக்கே தகிக்கும் வெயில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் பொதுமக்கள்

போச்சம்பள்ளி, மார்ச் 12: போச்சம்பள்ளி பகுதியில் காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆங்காங்கே நீர்மோர் பந்தல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கத்தரி வெயிலுக்கு முன்பே வெப்பம் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 6ம் தேதி வெயில் அளவு சதமடித்தது. தொடர்ந்து கடந்த 8ம் தேதி, 103 டிகிரி பாரன்ஹீட்டாக தகித்தது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு அகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வானம் பார்த்த பூமியான போச்சம்பள்ளி, பாரூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப தாக்குதல் காரணமாக உடல் சூட்டை தணிக்க காலை-மாலை இருவேளையும் கண்டிப்பாக குளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு  ஆளாகியுள்ளனர். இதனால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கோடைக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. சில நேரங்களில் அனல் காற்றும் வீசுகிறது. போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 8 மணி முதலே வெயில் கொடுமை தொடங்கி விடுகிறது. கோடை காலத்தில், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் ஆங்கங்கே தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகத்தை போக்குவார்கள். தற்போது, கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆங்காங்கே நீர்மோர் பந்தல் திறந்து வைத்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்,’ என்றனர்.

Tags :
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்