×

பாளையத்தில் மயான சூறை பெண்களை முறத்தால் அடிக்கும் நூதன வழிபாடு

பெரம்பலூர், மார்ச் 7: சிவராத்திரியையொட்டி பாளையம் கிராமத்தில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்களை முறத்தால் அடிக்கும் நூதன வழிபாடு நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இந்த ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் மகா சிவராத்திரி, மயான சூரை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 5ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு மூலஸ்தான அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், இரவு 10 மணிக்கு கொடியேற்றம், குடியழைத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (6ம் தேதி) காலை 9 மணிக்கு காளி புறப்பாடு நடந்தது. இதில் மயானத்தில் குவிந்த பெண்களின் நோய், பிணி நீங்க, வேண்டுதல் நிறைவேற கரிய நிறத்தில் காளிவேடமிட்டவர் முழங்காலிட்டு காத்திருந்த பெண்களை தலையில் முறத்தால் அடித்தார். பின்னர் மயானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை வழிமறித்து இடையிடையே பெண்கள் முழங்காலிட்டு முறத்தால் அடி வாங்கினர்.

இதைதொடர்ந்து மதியம் 1 மணிக்கு பெரம்பலூர்- துறையூர் சாலையில் மயான சூறை நடந்தது. இதில் காளியோடு உடன் வந்த 50க்கும் மேற்பட்ட மருளாளிகள் ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்தவாறு மயானத்தை சூறையாடினர். பிறகு ரத்தசோறு தெளிக்கப்பட்டது. இந்த ரத்த சோற்றை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும், தீராத வியாதிகள் தீரும் என்று நம்பப்படுவதால் நூற்றுக்கணக்கான பெண்கள் மடி பிச்சையேந்தி ரத்த சோற்றை வாங்கி சாப்பிட்டனர். இதில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 8 மணிக்கு குடல் பிடுங்கி மாலை அணிந்து ஊர்வலம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Tags : museum ,women ,bedroom ,
× RELATED ‘பல்லாங்குழி துவங்கி கோலிக்குண்டு...