×

கரூரில் நிர்வாக சீர்கேடு காரணமாக குறைந்து வரும் தறிகளால் வேலையின்றி தவிக்கும் நெசவாளர்கள் உற்பத்தி, விற்பனை இன்றி சொசைட்டிகள் தடுமாற்றம்

கரூர், மார்ச் 7: கரூரில் நிர்வாக சீர்கேடு காரணமாக தறிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம் கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற பகுதி.கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்ற இடத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.  ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் கைத்தறி நிறைந்திருக்கும். வீடுகள்  தோறும் நெசவுத்தொழில் நடைபெறும். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. ஆண்டுக்கு  சராசரியாக ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் நடைபெறுகிறது. ஏற்றுமதியை பொறுத்தளவில் பெரும்பாலும் கைத்தறி ரகங்கள் தான்  ஏற்றுமதியாகிறது. இருந்தும் கைத்தறி நெசவாளர்கள் வேலை இழந்த நிலையில்தான் உள்ளனர்.

கைத்தறித்துறையின் கண்டுகொள்ளாத போக்கினால் கைத்தறி  நெசவாளர்கள் வாழ்விழந்து தவிக்கின்றனர். கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு  தேவையான வீட்டு உபயோக ஜவுளிகள் இந்த கைத்தறிகளில் உற்பத்தி செய்து கொள்முதல்  செய்யப்படும். கூட்டுறவு அல்லாத தனியார் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி  செய்த படுக்கை விரிப்புகள், துண்டுகளை பக்கத்து மாவட்டங்களில் கொண்டுபோய்  விற்பனை செய்கின்றனர். தீபாவளி சமயத்தில் திருச்சி நகரத்தில் கைத்தறி  ரகங்களை அதிக அளவில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது நிலைமை  மாறிவிட்டாதால் உள்ளூர் விற்பனைக்கு கூட உற்பத்தி இல்லை என நெசவாளர்கள்  தெரிவிக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 1977ம் ஆண்டு  35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவு தறிகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு அவை  வெறும் 6 ஆயிரமாக குறைந்துபோய்விட்டன. கரூர் மாவட்டத்தில் கைத்தறி  கூட்டுறவு சங்கங்கள் மொத்தம் 56 உள்ளன. இந்த 56 சொசைட்டிக்கும்  7ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் இருக்கவேண்டும். ஆனால்  சொற்ப அளவுக்குத்தான் தறிகள் இயங்குகின்றன. கைத்தறி துறையின் நிர்வாக  சீர்கேடு காரணமாக தறிகள் எண்ணிக்கை குறைந்ததுடன் நெசவாளர்களும் வேலையின்றி  தவிக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் இந்த  சங்கங்களுக்கு தேர்தல் என்ற பெயரில் ஆளும்கட்சியினர் நியமிக்கப்பட்டனர். பல  இடங்களில் அவர்களுக்குள்ளேயே தகராறும் ஏற்பட்டது. நெசவாளர் ஆக இல்லாத பலர்  இந்த கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டிருக்கின்றனர்.  உற்பத்தியும் இல்லாமல், விற்பனையும் இல்லாமல் இந்த சொசைட்டிகள்  தடுமாற்றத்தில் உள்ளது. ஆளும் கட்சியினருக்கு பதவி கிடைத்ததுதான் மிச்சம்.  கோஆப்டெக்ஸ் நிர்வாகம் எதையும் கண்டுகொள்வதில்லை என்பது நெசவாளர்களின்  ஆதங்கம். எத்தனை தறிகள் உள்ளன. எத்தனை இயங்குகின்ற, நெசவு தொழிலாளர்களுக்கு  உதவி செய்யவேண்டும் என்ற அக்கறையெல்லாம் இந்த அரசுக்கு கிடையாது என  தொழிலாளர்கள் குமுறலுடன் உள்ளனர்.

கைத்தறி நெசவாளர்கள் கூறியது:தேர்தலினபோது மட்டுமே நெசவாளர்களின் பிரச்னை பேசப்படுகிறது. அதன் பின்னர்  எந்த திட்டத்தையும் கொண்டு வருவதில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்கள்,  தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஏற்றுமதி கைத்தறி  ரகங்களுக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கைத்தறி முத்திரை  அளிக்கிறது. இதனை மாநில அரசு கண்காணிப்பதும் இல்லை. கண்டுகொள்வதும் இல்லை.  அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாததுபோல மாநில கோஆப்டெக்ஸ் நிர்வாகம்  இருக்கிறது. பவர்லூமில் கைத்தறி ரகங்களை நெய்து ஏற்றுமதி செய்கின்றனர்.  இதனை சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதிக்கின்றனர். மாநில அரசு அதிகாரிகள்  இதுபற்றி கண்டுகொள்வதில்லை. மத்திய அரசுடன் பல பிரச்னைகளை வாதாடுவதாகவும்,  கடிதம் எழுதுவதாகவும் கூறுகின்றனர். எனினும் இப்பிரச்னை  கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது. கரூரில் கோஆப்டெக்ஸ் விற்பனை  நிலையம் ஒன்று உள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  இங்கு வந்து தள்ளுபடி மற்றும் கடன் முறையில் கைத்தறி ரகங்களை வாங்கி செல்வதாக  தெரிவித்தனர்.

Tags : Karur ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...