×

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் கடலூரில் ஜப்தி

கடலூர், மார்ச் 7: விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழக பேருந்து கடலூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த இடம் கன்னி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி பூபதி(50). கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி உறவினர் திருமணத்துக்கு செல்வதற்காக சிதம்பரத்திலிருந்து அரசு பேருந்தில் குறிஞ்சிப்பாடி சென்றார். குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் இறங்கும் போது டிரைவர் திடீரென பேருந்தை எடுத்ததால் பூபதி நிலைதடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தில் இறந்த பூபதி  கணவர் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி இறந்த பூபதியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5.40 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வட்டியுடன் ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்து 150 வழங்க வலியுறுத்தி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கடலூர் நீதிமன்ற ஊழியர்கள் கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த கடலூர் சிதம்பரம் அரசு பேருந்தை ஜப்தி செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags : accident ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...