×

உயர் அதிகாரிகள் டார்ச்சர் விஆர்எஸ் கோரும் எஸ்எஸ்ஐக்கள்: அரசு கவனம் செலுத்துமா?

மார்த்தாண்டம், மார்ச் 6: தமிழக காவல் துறையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சர்வீஸ் உள்ள ஏட்டுக்கள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் 50 வயதை எட்டியவர்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10 முதல் 15 சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிகின்றனர். சப் இன்ஸ்பெக்டர்களுக்கு உள்ள பொறுப்புகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இருந்தாலும், அதிகாரம் மட்டும் வழங்கப்படுவது இல்லை. அரசு வாகனம் கிடையாது. எங்கு செல்ல வேண்டுமானாலும், சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். அல்லது நடந்தோ, ஆட்டோ பிடித்தோ, பஸ்சிலோ செல்ல வேண்டும். ஆனால், இவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இணையான சம்பளம் உண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள 33 காவல் நிலையங்களில் பல ஹெவி ஸ்டேஷன்களாகவும், சில சாதாரண ஸ்டேஷன்களாகவும் உள்ளன. ஹெவி ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர், 3க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50 முதல் 55 பேர் பணிபுரிகின்றனர்.

ஆனால், சாதாரண ஸ்டேஷன்களில் 25 முதல் 30 பேர் வரை மட்டுமே பணிபுரிகின்றனர். கோர்ட் ஒர்க் உட்பட வெளியிட பணிகளுக்கு பல போலீசார் சென்று விடுவதால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10 முதல் 15 போலீசார் மட்டுமே பணியில் இருக்கின்றனர். தமிழக காவல் துறையில் உள்ள சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 டிரிங்க் அன்ட் டிரைவ் வழக்கு, சந்தேகத்தின் பேரிலான வழக்கு 5, வாரண்ட் கைது, ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் தகவல்கள் அளித்தல் என குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படுகிறது. இதனை பூர்த்தி செய்யாதவர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து வசைமாரி உட்பட டார்ச்சர் கிடைக்கிறது. பொதுவாக 50 வயதை கடந்து விட்டாலே இனம் புரியாத தளர்வு உடலில் வந்து விடுகிறது. உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக உடலை வைத்துக்கொண்டாலும், சுகர், பிபி என கண்டகண்ட நோய்களும் தலைகாட்டி விடுகின்றன. மேலும், குழந்தைகளின் உயர்கல்வி,

திருமணம் என குடும்ப சூழல்களும் வாட்டி வதைக்க வாழ்க்கையே கடும் போராட்டம் ஆகி விடுகிறது. இந்நிலையில், உயர் அதிகாரிகளின் டார்ச்சர் வேறு தலையை சுழல வைக்கிறது. எனவே, காவல் துறையில் பணியாற்றி பொதுமக்கள் சேவை செய்தது போதுமடா சாமி, பேசாமல் விஆர்எஸ் வாங்கி கொண்டு, குடும்ப காரியங்களை பார்க்கலாம் என பல சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் விஆர்எஸ் கோரி மாவட்ட தலைமைக்கு மனு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், மிகவும் வீக்காக உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விஆர்எஸ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டாம் என தலைமை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விஷயத்தில் அரசு போதிய கவனம் செலுத்தி, தமிழக காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களின் குறைகளை களைந்து, அவர்களின் அனுபவம் காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Darcher ,
× RELATED மனைவி டார்ச்சர் தாங்கமுடியாமல் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை