காரியாபட்டி, பிப். 28: காரியாபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 3 பஸ்களை அருப்புக்கோட்டை பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த பணிமனைக்கு மூடுவிழா நடத்தப்போவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து 21 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 129 பணியாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் 2 பேரூராட்சிகள், 36 ஊராட்சிகள் உட்பட 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக தினசரி காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர். கடந்த 2009 ஜூலை 26ல் திறக்கப்பட்ட பணிமனை, அன்று முதல் தனியார் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாமல் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டீசல் பங்கு இல்லை. மழை பெய்தால் சேறும், சகதியுமாக பணிமனை மாறுகிறது.
பணிமனைக்கு, அரசு இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்ட சட்டசபையில் 110 விதியின் கீழ் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், காரியாபட்டியில் அரசு நிலங்கள் அதிகமாக இருந்தும், அதிகாரிகள் பணிமனைக்கு இடத்தேர்வு செய்யாமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், காரியாபட்டி திருச்சுழி தொகுதியில் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 20 பஸ்களுக்கு குறைவாக உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளை மூடுவதற்கு, போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காரியாபட்டி பணிமனையை விரைவில் மூடப்போவதாக தெரிவிக்கின்றனர். இதனால், மூன்று பஸ்களை அருப்புக்கோட்டை பணிமனைக்கு மாற்றியுள்ளனர். மேலும் மதுரை, விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கும் பஸ்களை மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர். காரியாபட்டி பணிமனையை மூடினால், சுற்றுப்புற கிராமங்களின் பஸ் சேவை பாதிக்கப்படும் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே, காரியாபட்டியில் அரசு போக்குவரத்து பணிமனைக்கு அரசு நிலத்தில் நிரந்தர கட்டிடம் அமைத்து, சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் குமராண்டி கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள அதிமுக அமைச்சர் காரியாபட்டி பணிமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 110 விதி அறிவிப்பு காற்றில் பறந்தது. இதற்கு பின் அறிவிக்கப்பட்ட ராஜபாளையம், வத்திராயிருப்பில் பணிமனைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. காரியாபட்டி திமுக தொகுதியில் இருப்பதால், ஆளுங்கட்சியினர் எந்தவித நலத்திட்டங்களையும் செய்வதில்லை.
விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் மலைச்சாமி கூறுகையில், ‘கிராமங்கள் நிறைந்த இந்த பகுதியில் பஸ் போக்குவரத்து இன்றியமையாதது. காரியாபட்டி பணிமனையை காலி செய்தால், கிராமப்புறங்களுக்கு பஸ் போக்குவரத்து குறைந்து விடும்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, காரியாபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடக்கூடாது. நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் கார்த்திகேய பாண்டியன் கூறுகையில், ‘காரியாபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், திமுக ஆட்சியில் கொண்டு வந்த கல்லூரியை, அதிமுக அரசு வேறு பகுதிக்கு மாற்றியது.
நல்ல முறையில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனையை காலி செய்ய நினைப்பது கிராமத்து மக்களை வஞ்சிப்பதாகும். பணிமனை விவகாரத்தில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் போராட்டம் நடத்துவோம்’ என்றார். இது குறித்து பணிமனை கிளை மேலாளர் வெங்கடசுப்புவிடம் கேட்டபோது, ‘பணிமனையில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால், மூன்று பஸ்களை அருப்புக்கோட்டை பணிமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த பணிமனையை காலி செய்யும் உத்தரவு இல்லை’ என்றார்.