×

வெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில் புதர்மண்டிக் கிடக்கும் சாலையோர தடுப்பு

சிவகாசி, பிப். 28: வெம்பக்கோட்டை-ஆலங்குளம் சாலையில் சாலையோர இரும்பு தடுப்பில், பாதுகாப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன், அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை வழியாக கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருவேங்கடம் ஆகிய ஊர்களிலிருந்து ஆலங்குளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை இருப்பதால், தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், ஆலங்குளம் சாலையில் குறுகலாகவும், வளைவாகவும் இருக்கும் இடங்களில் இருப்பு தடுப்புகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர். இந்த தடுப்புகளில் போக்குவரத்து எச்சரிக்கை ஸ்டிக்கர் எதுவும் ஒட்டப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

வெம்பக்கோட்டை-ஆலங்குளம் சாலையில் கண்டியாபுரம் அருகே, சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் முகப்பில் பாதுகாப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லை. இந்த தடுப்புகளைச் சுற்றி செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டுச் செல்லும் வாகனங்கள் தடுப்பில் மோதும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சில மாதங்களுக்கு முன், டூவீலரில் வந்த 2 பேர் இரும்பு தடுப்பில் மோதி பலியாயினர். எனவே, வெம்பக்கோட்டை-ஆலங்குளம் சாலையில் உள்ள சாலையோர தடுப்புகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டவும், தடுப்புகளை மறைத்து வளரும் செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pump ramp ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி