×

திருப்புத்தூரில் கருகும் மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முயற்சி

திருப்புத்தூர், பிப். 28: திருப்புத்தூர் ஒன்றியம் கோட்டையிருப்பு ஊராட்சியில் கருகும் மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி காப்பாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் கண்மாய், ஊரணி, வரத்துக்கால்வாய் உள்ளிட்ட பணிகள் 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. தற்போது மரக்கன்றுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்புத்தூர் ஒன்றியம் கோட்டையிருப்பு ஊராட்சியில் கோட்டையிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே நாட்டார்மங்கலம் விலக்கு ரோட்டின் அருகில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு அதற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. கோட்டையிருப்பில் உள்ள குளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுகின்றனர்.

இதில் சுமார் 60 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும். இதற்கு 5 பேர் போதுமானது. ஆனால் அதிகமான பெண்களை பயன்படுத்துகின்றனர். 100 நாள் திட்ட பணியாளர்களை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்தாமல், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படுத்தப்படுவது என்பது அரசு நிதி வீணடிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கவனிக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று செயல்படுவதை கண்காணித்து, இனி வரும் காலங்களில் முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்