×

முத்துப்பேட்டை பேரூராட்சி குளங்களில் மீன்களுக்கு கெட்டுப்போன உணவுகளை கொட்டுவதால் ஏலத்தை நிறுத்த வேண்டும் சமூக ஆர்வலர் கோரிக்கை மனுவால் பரபரப்பு

முத்துப்பேட்டை,பிப்.28:    முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் நேற்று குளங்கள் ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே சென்றவாரம் இதுபோல் ஏலம் அறிவிக்கப்பட்டு திடீரென்று ரத்து செய்யப்பட்டது. அதனால் நேற்று ஏலம் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகத்தில் ஏராளமான ஏலதாரர்கள் குவிந்திருந்தனர். ஏலம் விடவும் அலுவலர் தயாராகினர். அப்போது சமூக ஆர்வலர் முகமது மாலிக் குளங்கள் ஏலம் விடுவதை மக்கள் நலன்கருதி ரத்து செய்யவேண்டும் என்று செயல் அலுவலர்செந்திலனிடம் மனு கொடுத்தார்.அதில் அவர்  கூறியிருப்பதாவது: குளத்தை ஏலத்தின் மூலம் எடுப்பவர்கள் மீன்களை விட்டு அதிக லாபம் எடுக்கவேண்டும் என்ற வியாபார நோக்கத்தோடு குளம் மற்றும் குட்டைகளில் மீன்களுக்கு உணவாக கோழி கழிவுகளையும், காய்கறி மற்றும் பழக்கழிவுகளையும் கெட்டுபோன உணவுகளையும் மீன்களை வளர்க்ககூடிய ரசாயன உரங்களையும் இரவோடு இரவாக நீர்நிலைகளில் கலந்து விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தோல் நோய் மற்றும் இன்னும் பிற நோய்கள் ஏற்பட காரணமாக அமைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்த ஆண்டு குளம் மற்றும் குட்டைகளை ஏலம் விடுவதை நிறுத்தி  நீர்நிலைகளை பராமரித்து பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.சமூக ஆர்வலர் முகமது மாலிக்கிடம் செயல் அலுவலர் செந்திலன், தாங்கள் கூறியபடி குளங்களை வீணாக்கும் வகையில் ஏலதாரர்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து சமாதானம்  அடைந்து அவர் சென்றார்.

Tags : bidding ,paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை