×

பாலக்காடு அருகே புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை கேரள கவர்னர் திறந்துவைத்தார்

பாலக்காடு, பிப்.27: கேரளாவில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் புதுப்பிக்கப்பட்ட பூர்வீக வீட்டை கேரள கவர்னர் சதாசிவம் நேற்று  திறந்து வைத்தார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு அருகே வடவனூரில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டை ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டிற்கு முன் துங்கப்பட்டது. தற்போது புதுபிக்கும் பணி முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை கேரள கவர்னர் சதாசிவம் நேற்று  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதேபோல்  எம்.ஜி.ஆரின் உருவசிலை, புதுப்பிக்கப்பட்ட சத்யா நிலையம், எம்.ஜி.ஆர்., பெயரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், எம்.ஜி.ஆரின் பெற்றோர் உருவச்சிலைகளை மற்றும் அருங்காட்சியத்தையும் கவர்னர் சதாசிவம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கவர்னர் சதாசிவம் பேசியதாவது: ‘‘வடவனூர் ஊராட்சி நிர்வாகம், மனிதநேய ஐ.ஏ.எஸ்., அகடாமி சார்பில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த எம்.ஜி.ஆரின் இல்லம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் நினைவுகள் மாறாத வண்ணம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் அரிய புகைப்படங்கள், குறுந்தட்டுகள், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.  மேலும், நடிப்புத்துறை மூலம் அரசியலுக்கு வந்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அவரது நினைவு இல்லம் சுற்றுலா பயணிகளுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை நினைவுகள், தத்துவப்பாடல்கள் அனைத்துமே மக்களுக்கு பயன்பெற்று வருகிறது.
இவ்வாறு சதாசிவம் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வரவேற்றார். தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்., ராதா, ஏ.சி.சண்முகம், வடவனூர் ஊராட்சித் தலைவர் சயிரம்திரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஜெயசந்திரன், நெம்மாரா எம்.எல்.ஏ., பாபு, கேரள மாநில நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Governor ,residence ,Kerala ,Palakkad ,MGR ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...