×

மாவட்ட ஊராட்சிகளில் நீர் வராத போர்வெல் கணக்கெடுப்பு

கோவை, பிப்.27: கோவை மாவட்டத்தில் நீர் வராத போர்வெல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது.  கோவை மாவட்டத்தில் 225 ஊராட்சிகளில், 1108 கிராமங்கள் இருக்கிறது. ேகாடை துவங்கும் முன்பே 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. கிணற்று நீர் சப்ளையை பெரும்பாலான கிராம மக்கள் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என எதிர்ப்பு காட்டியுள்ளனர். நீரில் உப்பு தன்மை அதிகமாக இருப்பதாலும், நோய் பாதிப்பு ஏற்படுவதாலும் பொதுமக்கள் பில்லூர், பவானி, ஆழியாறு திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  மாவட்ட அளவில், 80 சதவீத கிராமங்களுக்கு ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதர கிராமங்களில் கூட்டு குடிநீர் சப்ளை கிடையாது. சில கிராமங்களில் குடிநீரில், கிணறு மற்றும் போர்வெல் தண்ணீர் கலந்து சப்ளை செய்கின்றனர். அன்னூர், நீலம்பூர், கணியூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், எட்டிமடை, கோவில்பாளையம், இடிகரை, வெள்ளகிணறு, பெரியநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக புகார் அதிகமாகியுள்ளது. மேலும் 3 மாதம் வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும் வாய்ப்புள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.

 கடந்த 5 ஆண்டில் கோடைக்கு முன் வெயில் தாக்கமும், வறட்சியும் அதிகரிக்கவில்லை. குறிப்பாக தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து போன காலங்களில் கூட இதுபோன்ற நிலை கிடையாது. ஆனால் கடந்த இரு பருவத்திலும் மழை போதுமான அளவு பெய்தும் கோவை மாவட்டத்தில் கோடைக்கு முன் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஊராட்சிகளில் பயன்பாடில்லாத போர்வெல், நீர் இல்லாத போர்வெல், குடிநீர் இல்லாத கிராமங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது. ஓரிரு நாளில் குடிநீர் பாதிப்பு குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நீரில்லாத போர்வெல் ஆழம் அதிகரிக்கவும், கூடுதலாக 150க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், குடிநீர் சப்ளை குறைந்தால் ஆளுங்கட்சியினர் மீது மக்கள் அதிருப்தியடையும் நிலையிருக்கிறது. ஓட்டு கேட்டு மக்களை சந்திக்க சென்றால் வாக்குவாதம் ஏற்படும் என ஆளுங்கட்சியினர் கருதுகின்றனர். எனவே தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆயத்தமாகி வருகின்றனர். ஊராட்சி பகுதிகளில் ரோடு, திடக்கழிவு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை