×

ஜிஹெச் பிணவறையில் தில்லுமுல்லு லஞ்சம் வாங்க கேமரா இணைப்பு ‘கட்’

மதுரை, பிப்.26:  மதுரை அரசு மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக பிணவறையில் லஞ்சம் கொடுத்தால்தான் அனைத்தும்  விரைவாகவும் முறையாகவும் நடக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்க, பிணவறையில் இருந்தவர்கள், வெடிபாக்ஸ் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிணவறையில் இருந்த சிலர் பணியிட மாற்றம் ெசய்யப்பட்டனர். இதற்கிடையே பிணவறையில் மேலும் ஒரு புகார் எழுந்தது. சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரியின் உறவினர் ஒருவரின் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டுள்ளனர். அவர்களும் பணம் கொடுத்துவிட்டு உடலை வாங்கிச் சென்றுவிட்டனர். பின்னர் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நேற்று முன்தினம் பிணவறையில் ரகசிய  விசாரணை நடந்தது. முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அதில் எந்த பதிவும் இல்லை. காட்சிகள் பதிவாகமலிருக்கும் வண்ணம், கேமராவை இயக்க பயன்படும் மெயின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கேமராவிற்கு செல்லும் வயர்களும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதை செய்தவர்களை கண்டறிய, காவல்துறையிடம் புகார் அளிக்க போவதாகவும்  தெரிவித்துச் சென்றுள்ளனர்.
 மருத்துவ ஆர்வலர்கள் கூறுகையில், ``பிணவறையில் 5 இடங்களில் கேமராக்கள் உள்ளன.

இதில் பிணவறை மற்றும் உள் அறைகளில் உள்ள கேமராக்களில் எந்தக் காட்சிகளும் பதிவாகவில்லை. பிணவறையில் நடக்கும் லஞ்சம் உள்ளிட்ட சமாச்சாரங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே கேமரா சுவிட்சை ஆப் செய்து, வயர்களை துண்டித்துள்ளனர். பல மாதங்களாக எந்த காட்சியும் கேமராவில் பதிவாகவில்லை. இதேபாேல் ஏற்கனவே ஒருமுறை நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் தெரியாமல் கைபட்டு விட்டதாக பிணவறையில் இருந்தவர்கள் தெரிவித்து தப்பித்துவிட்டனர். தற்போது 2வது முறையாக நடந்துள்ளது. கேமராக்களை முழுமையாக இயங்கச் செய்ய வேண்டும் அல்லது கேமராவை அகற்றிவிட வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி