×

வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகளில் ஜப்திக்கு திட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் வரி பாக்கி 16 கோடி

நாகர்கோவில், பிப்.26 : நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது 52 வார்டுகள் உள்ளன.  ஒவ்வொரு நிதி ஆண்டு காலத்திலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்க அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு மாநகராட்சியாக மாறி உள்ளதால் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.  
ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் குமார்சிங் தலைமையில் வரி வசூலிப்பு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த குழுவில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் அலெக்சாந்திரா பிரஸ் ரோட்டில் வரி பாக்கி தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்களை ஆணையர் உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வந்தனர். குறிப்பாக 25 கட்டிடங்கள் ஜப்தி நடவடிக்கைக்கு உள்ளாக இருந்தன. இவற்றில் பெரும்பாலானவர்கள் அதிகாரிகளிடம் காசோலை கொடுத்தனர். சிலர் நேரடி பணமும் கொடுத்து ரசீது பெற்றனர். சிலர் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களிடம் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. உடனடியாக வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரை சொத்து வரி, குடிநீர் வரி உள்பட 25 வரி இனங்கள் உள்ளன. இதில் சமீபத்தில் குடியிருப்புகளுக்கான வரி 50 சதவீதமும், வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களின் வரி 100 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது. வரி இனங்கள் அதிகரிப்புக்கு பின் நடந்த கணக்கெடுப்பு படி மாநகராட்சிக்கு ரூ.16 கோடி வரி பாக்கி உள்ளது. இதை பிப்ரவரி 28க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளதால் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது. எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக  நகராட்சி வரி வசூல் மையத்தில் தங்களுக்கு உண்டான வரியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். பிரபல தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் வரி பாக்கி வைத்துள்ளனர். இவர்களும் உடனடியாக வரிகளை செலுத்தா விட்டால் இன்னும் சில நாட்களில் நாகர்கோவில் மாநகரில் பல கட்டிடங்களில் ஜப்தி நடவடிக்கை இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Jaffna ,enterprises ,hospitals ,Nagarcoil Corporation ,
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது