×

மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிவிட்டு மாணவர்கள் தப்பி ஓட்டம்: நடுரோட்டில் பேருந்துகள் நிறுத்தம்

வேளச்சேரி: மேடவாக்கத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிவிட்டு கல்லுாரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்டித்து ஓட்டுனர்கள், வேளச்சேரி பிரதான சாலையில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடவாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் மாநகர பேருந்து (தடம் எண்.51) கட் சர்வீஸ் (மேடவாக்கம் கூட்ரோடு - தி.நகர்) நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், கல்லூரி மாணவர்கள் சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பேருந்தின் டிரைவர் தாம்பரம் சானடோரியம், துர்கா நகர், 2வது தெருவை சேர்ந்த உதயகுமார் (45), பேருந்தை எடுத்துச் செல்வதற்காக ஏறியுள்ளார்.

அப்போது அவர், மாணவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கைகலப்பானது. அப்போது, மாணவர்கள் சேர்ந்து டிரைவரை தாக்கியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையறிந்த மாநகர பஸ் டிரைவர்கள் பேருந்துகளை இயக்காமல், வேளச்சேரி பிரதான சாலையில் நிறுத்தினர். 10கும் மேற்பட்ட பேருந்துகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்ய வேண்டும் என டிரைவர்கள் கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் டிரைவர்களை  சமாதானப்படுத்தி, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து டிரைவர்கள் பேருந்தை எடுத்து சென்றனர். மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய டிரைவர் உதயகுமார் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடிய மாணவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bus stop ,bus stand ,junction ,
× RELATED பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம்