×

ஊத்துக்கோட்டை - கோயம்பேடுக்கு அரசு பேருந்து சேவை திடீர் குறைப்பு: மாணவர்கள் கடும் அவதி

ஊத்துக்கோட்டை, பிப். 26: ஊத்துக்கோட்டை -  கோயம்பேட்டிற்கு அரசு பேருந்து சேவை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு வியாபாரம், வேலை மற்றும் அலுவலகங்களுக்கு தினசரி சென்று வருகின்றனர். இந்நிலையில், காடந்த 2 வாரங்களாக ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி என 43 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 26 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிறுத்தங்களில் மாணவ, மாணவிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பணிமனை ஊழியர்கள் கூறியதாவது: ஊத்துக்கோட்டை பணிமனையில்  இருந்து இயக்கப்பட்டு வந்த 43 பஸ்களில் 26 பஸ்கள் தான்  ஊத்துக்கோட்டையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் சில பேருந்துகள் பெரியபாளையம் வழியாக செங்குன்றம், சென்னை கோயம்பேடுக்கு  இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் 5 முதல் 8 பஸ்கள் வரையும் மற்ற நாட்களில் 2 பஸ்களும்  திருச்சிக்கு இயக்கப்படுகிறது. மேலும் அமாவாசை அன்று மேல்மலையனூருக்கும், பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கும் 10 பஸ்களை அனுப்பி விடுகிறார்கள் இதனால், கோயம்பேட்டிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் குறைந்துவிட்டது என்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; ஊத்துக்கோட்டையிலிருந்து மாம்பாக்கம், பிளேஸ்பாளையம், மெய்யூர்  போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 2 பஸ்களில் தற்போது ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

மேலும் ஆந்திர மாநிலம் புத்தூர், நகரி காளஹஸ்திரிக்கு இயக்கப்பட்ட பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்களின் தேவையை அறிந்து ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்படும்  பஸ்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பாமல்   ஊத்துக்கோட்டை - கோயம்பேடு பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டையிலிருந்து கோயம்பேட்டிற்கு இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலாவை ஓட்டை உடைசலாகவே உள்ளது. இந்த பஸ்களை திருவண்ணாமலைக்கும், மேல்மலையனூருக்கும் அனுப்பினால் நாங்கள் அச்சத்துடனே ஓட்டிச்செல்கிறோம். இனியாவது பஸ்களை வெளியூர்களுக்கு அனுப்பாமல் ஊத்துக்கோட்டை பஸ்களை ஊத்துக்கோட்டைக்கே அனுப்பவேண்டும்.

மேலும் ஊத்துக்கோட்டை பணிமனையில் பணிபுரிந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஆகிய எங்களை  ஒரு நாளைக்கு 400 கிமீ இயக்க  வேண்டிய பஸ்களை  600 கிமீ. தூரம்  இயக்கச்சொல்கிறார்கள். இதனால் வேலை பளு அதிகமாகிறது என்பதால் பெரும்பாலான டிரைவர்,  கண்டக்டர்கள்  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மாற்றலாகி சென்று விட்டனர். ஊத்துக்கோட்டையில் இருந்து அதிகாலை 3.15, 5.45,  7.30,  8.30  மணி வரையும் பொதுவாக எல்லா தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்பிறகு மாலை 3.45 மணிக்கு தான் ஒரு பஸ் இயக்கப்படுகிறது பிறகு   கோயம்பேடு மற்றும் மாதவரத்திற்கும் பஸ்கள் கிடையாது, புதிதாக பணிமனைக்கு வந்த 3 பஸ்கள் திருச்சி, திருப்பதி, காளஹஸ்திரிக்கு இயக்கப்படுகிறது ஊத்துக்கோட்டைக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்களில் இதுவரை ஊத்துக்கோட்டை மக்கள் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Government ,Udukkottai - Koyambedu ,
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை