×

விருத்தாசலம் மாசிமக விழாவில் ஆதரவின்றி கிடந்த குழந்தை மீட்பு

விருத்தாசலம், பிப். 20:  விருத்தாசலத்தில் நேற்று மாசிமக பெருவிழா நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கோபுர வாசல் அருகே மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாக பெண் ஒருவர்  போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அந்த குழந்தையை போலீசார் மீட்டு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் குழந்தையை யாரும் வந்து கேட்கவில்லை.

இந்நிலையில் பால் இன்றி குழந்தையும் அழுது கொண்டிருந்தது. இதனால் அந்த குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். குழந்தைக்காக யாரும் உரிமை கோரி வராததால் கடலூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலர் புவனேஸ்வரிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த குழந்தைகள் உதவி  மைய அலுவலரிடம் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாசிமகத்தில் பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் ஆதரவின்றி குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.

Tags : ceremony ,Vriddhachalam Masjam ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா