×

செங்கல்பட்டு அருகே பரபரப்பு ; பதற்றம் போலீஸ் டார்ச்சரால் வாலிபர் தற்கொலை

* உறவினர்கள் சாலை மறியல்
*போலீசார் தடியடி
* போர்க்களமாக மாறிய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
செங்கல்பட்டு, பிப்.14: கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு போலீசார் டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை களைய செய்தனர். இதனால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயகுமார் (18). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு தாலுகா போலீசார், ஜெயமார் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுதொடர்பாக, ஜெயகுமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து, ஜெயகுமார் கல்லூரிக்கு பைக்கில் சென்று வரும்போது, போலீசார் இழிவுப்படுத்தி தகாத வார்த்தையால் திட்டியும், மற்ற குற்றாவாளிகளை கேட்டு அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், அதனால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றும் உறவினர்களிடம் ஜெயகுமார் கூறியுள்ளார். ஆனாலும் உறவினர்கள், அவருக்கு ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் காலை ஜெயகுமார், வழக்கம்போல்  கல்லூரிக்கு பைக்கில் சென்றார். மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். வீடு திரும்பி கொண்டிருந்தபோது, வழியில் தாலுகா போலீசார் அவரை மடக்கி இழிவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டுக்கு வந்த ஜெயகுமார், அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.

நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், சந்கேமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை வேகமாக தட்டினர். ஆனால் எந்த பதிலும் இல்லை. உடனே அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஜெயகுமார் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதற்கிடையில், ஜெயகுமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை செங்கல்பட்டு - சென்னை செல்லும் புலிபாக்கம் கூட்டு சாலையில் திரண்டனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ‘ஜெயகுமார் சாவுக்கு தாலுகா போலீஸ்தான் காரணம்’ என கூறி கோஷமிட்டனர்.இதையறிந்த செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘பணம் கேட்டு போலீசார், ஜெயகுமாரை மிரட்டினர். மேலும் தகாத வார்த்தையால் திட்டினர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆவேசமாக கூறினர்.அதற்கு, ‘விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தாசில்தார் உறுதியளித்தார். இதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை ஜெயகுமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அரசு மருத்துவமனையில் இருந்து புலிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஜெயகுமார் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயகுமார் படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனரை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.டிஎஸ்எபி கந்தன், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சவுந்தர்ராஜன் உள்பட 50க்கு மேற்பட்ட போலீசார், அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லும்படி கூறினர். அதற்கு, ஜெயகுமார் சாவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி கோஷமிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என அனைவர் மீதும் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் அஞ்சலி பேனரையும் கிழித்து எறிந்தனர். இதில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் நாலாபுரமும் சிதறி ஓடினர். தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள், சாலையோரம் நின்று, தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு பதற்றம் ஏற்பட்டது.பின்னர், பொதுமக்களிடம் சமரசம் பேசிய டிஎஸ்பி கந்தன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். புலிப்பாக்கம் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அங்கு 200க்கு மேற்பட் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 10 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

Tags : Faint ,suicide ,Chengalpattu ,police torch ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...