×

திறப்பு விழா நடந்து 2 மாதம் மட்டுமே இயங்கிய நிலையில் 21 ஆண்டுகளாகியும் செயல்படாத கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையம் சமூகவிரோதிகளின் கூடாரமான அவலம்

நீடாமங்கலம்,பிப்.13:கூத்தாநல்லூரில் 21 ஆண்டுகளாக செயல்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி மன்னார்குடி சாலையில் செயல் படாமல் உள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையம் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமாகிய மு.கருணாநிதியின் 75வது பவள விழாவையோட்டி 10.06.1998 அன்று அப்போதைய மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையிலும், நகர்மன்ற தலைவர் பொன்னுசாமி முன்னிலையிலும் மறைந்த முன்னாள் உள்ளாட்சிதுறை அமைச்சர் கோசி மணியால் திறக்கப்பட்டது.இந்த பேருந்து நிலையத்தில் சுமார் 14 கடைகளும்,கழிவறை வசதிகளும் சுமார் 2 ஏக்கர் சுற்றளவுள்ள இடமாகவும் அமைந்து செயல்பட்டது.
பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு 2 மாதங்களிலேயே செயல்பாடுகள் இல்லாமல் கடந்த 21 ஆண்டுகளாக பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் மது குடிப்பவர்களின்  பாராகவும்,சில சமூக விரோதிகளின் கூடாரமாகவும்  செயல்படுகிறது. .இங்கு தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வெளியூர்களுக்கு செல்கிறது.எனவே பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கூத்தாநல்லூர் நகராட்சி பகுதி காதர்உசேன் கூறுகையில் கடந்த 21ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது.தொடங்கி இரண்டு மாதங்களிலேயே அங்கு பேருந்துகள் செல்வதில்லை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றார்.

Tags : bus terminus ,Koodanallur ,opening ceremony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா