×

பெருகவாழ்ந்தான் அருகே புயல் கடந்து 86 நாட்கள் ஆகியும் குடிநீர் தொட்டி மோட்டாருக்கு மின் இணைப்பு தராததால் மக்கள் அவதி 2கிமீ தூரம் தண்ணீருக்கு பைக்கில் அலையும் அவலம்

மன்னார்குடி, பிப். 13: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்குட் பட்ட மறவாதி, காந்தாரி, பாம்புக்காணி, ஆவிடை தேவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர் களின் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மறவாதி கிராமத்தில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டி கட்டப்பட்டது. அதன் அருகில் 180 அடிக்கு போர்வெல் போடப்பட்டு அதில் மின் மோட்டார் இணைத்து அதன்  மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு   தண்ணீர் ஏற்றப்பட்டு 4 கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இடையில் 2012ம் ஆண்டு போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்தது. மேலும் அதில் பொருத்தப்பட்டிருந்த  மின் மோட்டார் பழுதாகியது. அதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதுகுறித்து கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டம் மூலம் ரூ.93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுது பார்க்கப் பட்டது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதாகியதால் மீண்டும் குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி அடித்த கஜா புயலால் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. அதனால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஏராளமான மின்வாரிய பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு 1 மாதம் கழித்து வீடுகளுக்கான மின் இணைப்புகள் மட்டும் வழங்கப்பட்டது. சீரமைப்பு பனியின் போது ஏராளமான குடிநீர் குழாய்கள் உடைந்து விட்டது. அவற்றை பணியாளர்கள் சீரமைத்து தரவில்லை.
புயல் காரணமாக மறவாதி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வரும் மின் இணைப்புகள் அறுந்து விழுந்தது. புயல் கடந்து 86 நாட்கள் ஆகியும் குடிநீர் ஏற்றும் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மறவாதி, காந்தாரி, பாம்புக் காணி, ஆவிடை தேவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம்  முடங்கி விட்டது. குடிநீர் இல்லாமல் 4 கிராம மக்கள் குறிப்பாக பெண்கள்   பெரும் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் மனுக்கள் அளித்தும் பலனில்லை.
சமீபத்தில் காந்தாரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைய உள்ள தேர்தல் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வந்தார். அவரிடம் குடிநீர் பிரச்னை குறித்து கிராம மக்கள் வேதனையுடன் கூறினர். ஓரிரு நாட்களில் சீர்செய்யப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று வரை குடிநீர் பிரச்னை தீரவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காந்தாரி கிராமத்தை சேர்ந்த குடும்ப தலைவி மகாதேவி கூறுகையில்,
எங்கள் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் மறவாதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டாருக்கு  புயல் கடந்து 85 நாட்கள் ஆகியும் மின் இணைப்பு கொடுக்காததால் கடந்த 3 மாதமாக குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். 2 கிமீ தூரம் நடந்து சென்று அடி பம்புகளில் வரும் குறைந்த அளவு  தண்ணீரை பிடித்து  எடுத்து வருகிறோம். ஓரளவு வசதி படித்தவர்கள் குடிநீர் கேன்களை வாங்கி பயன் படுத்துகின்றனர். ஏழை மக்களின் நிலைமை மோசமாக உள்ளது. கோடைக் காலம் ஆரம்பித்து விட்ட  சூழலில் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் எங்கள் நிலைமையை அதிகாரிகள் உணர வேண்டும். விரைவில் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க உரிய நட வடிக்கையை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதுகுறித்து மறவாதி  கிராமத்தை சேர்ந்த நாகராஜன்  கூறுகையில்,
புயல் கடந்து 3 மாதமாகியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப் படவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் ஊரு ஊராக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.  கோடை வெயில் கடுமையாக அடிக்கும் சூழலில் குளங்களில் தண்ணீர் இல்லாத நிலையில் கிராம மக்கள் மட்டும் அல்ல கால்நடைகளும் குடிக்க தண்ணீ ரின்றி அவதி பட்டு வருகின்றன. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற அதிகாரிகள் மறுப்பது நியாயமல்ல. எனவே உரிய அதிகாரிகள் மறவாதி கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : storm ,floodwaters ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...