×

வருவாய் குறைவு என்பதற்காக கிராமங்களுக்கு டவுன் பஸ்களை இயக்காத அதிகாரிகள்: 8 கி.மீ.தூரம் நடந்து செல்லும் மக்கள்

திருவள்ளூர், பிப். 12: வருவாய் குறைவு என்பதற்காக கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை வேறு தடங்களில் இயக்கி வருவாய் ஈட்டுகின்றனர். இதனால், 3 முதல் 8 கிலோ மீட்டர்  தூரம் நடந்த நகர்புறத்துக்கு சென்று அரசு பஸ்சில் பயணிக்க வேண்டி உள்ளது என கிராம மக்கள் கூறுகின்றனர்.விழுப்புரம் கோட்டம் திருவள்ளூர் டெப்போவில் இருந்து, 26 டவுன் பஸ்கள், திருத்தணி டெப்போவில் இருந்து, 36 டவுன் பஸ்கள் என மொத்தம் 62 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும்,  பள்ளி நாட்களில், மாணவர்களுக்காக காலை, மாலை வேளைகளில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலான டவுன் பஸ்கள் அரசு அறிவித்தபடி இயக்கப்படுவதில்லை.   உதாரணமாக, திருவள்ளூர் பணிமனையில் இருந்து, கனகம்மாசத்திரம், காஞ்சிப்பாடி, ராமஞ்சேரி, பேரம்பாக்கம், தக்கோலம், களாம்பாக்கம் வழியாக திருவாலங்காடு ஆகிய பகுதிகளுக்கு  இயக்கப்படும் பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. மாறாக, அவை திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.அதேபோல், திருத்தணி பணிமனையில் இருந்து, புச்சிரெட்டிப் பள்ளி, கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், சிவாடா, மத்தூர், ஜனகராஜகுப்பம், ராகவுலுநாயுடுகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் டவுன்  பஸ்களும் சரியாக இயக்கப்படுவதில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’கடந்த 2 ஆண்டுகளாக கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதையும், பஸ்  வருவதில்லை என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.

இதனால், சில நேரங்களில், சாலை மறியல், பஸ் சிறைப்பிடிப்பு போராட்டம் நடத்தப்படும். அந்த நேரத்தில் மட்டும், ஒரு வாரம் ஒழுங்காக வரும். அதன்பிறகு, கிராமபுறங்களுக்கு வந்து சென்ற  அரசு பஸ் மாற்று தடத்தில் இயக்கப்படும், இதனால், நாங்கள், 3 முதல் 8 கி.மீ., தூரம் வரை நகர் பகுதிக்கு நடந்து சென்று பஸ்சில் ஏறிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அதிகாரிகளின்  அலட்சியத்தால் கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறங்களில் வந்து படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு மிகவும் பாதிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில்  விளையும் விளைபொருட்கள் நகர்புறங்களுக்கு எடுத்து சென்று விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.இதுகுறித்து, போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், டவுன் பஸ்களுக்கு ஒரு நாளைக்கு, ₹5,000 முதல் 7,000 வரை வருமானம் கணக்கு காட்ட வேண்டும். ஆனால், கிராமங்களுக்கு  பஸ்கள் இயக்கப்படும்போது, அந்த இலக்கை எட்ட முடிவதில்லை. இதனால், அடிக்கடி ‘மெமோ’ வழங்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு வருவாய் கணக்கு காட்ட, சில நேரங்களில் டவுன்  பஸ்களை மாற்று தடத்தில் இயக்கி, அந்த பணத்தை கணக்கு காட்ட வேண்டி உள்ளது.என்றார்.  அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட கிராம மக்களை அலைகழிப்பதால், ஆளும் அதிமுக அரசு மீது  கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : villages ,towns ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்