×

‘வேலைக்கு தகுதியற்றவன்’ என உயரதிகாரி அவமானப்படுத்தியதால் கால்நடை டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

* உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
* உதவி இயக்குநரை கைது செய்ய கோரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 8: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த மகன்காளிகாபுரம் ஊராட்சி, அம்பலேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சிவா (28). பாலாபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி டாக்டராக பணியாற்றினார். கடந்த ஒரு வாரமாக சிவா கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மேல் அதிகாரியின் டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டாக்டர் சிவா, தனது தம்பி சங்கரிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். அப்போது தம்பி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி மரத்தில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர், ரமேஷ், சப்.இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த சிவாவின் உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பிரேத பரிசோதனை முடிந்து சிவாவின் உடலை, உதவி இயக்குநர் மகேந்திரனை கைது செய்யும் வரை வாங்க மாட்டோம் என கூறி சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.தகவலறிந்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், ‘‘மகேந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். சிவாவின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள், ‘‘நீங்கள் கூறிய கோரிக்கைகள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் சிவாவின் உடலை வாங்கி சென்றனர்.திட்டங்களை செயல்படுத்த நெருக்கடி:    கால்நடை மருத்துவர் தற்கொலை விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவியது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் மாநில பொதுச்செயலாளர் தணிகைவேல் தலைமையில் நேற்று மதியம் திருத்தணியில் ஒன்று கூடினர்.  

சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த, அதுவும் தேர்தலுக்கு முன்பு செயல்படுத்த கால்நடை மருத்துவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் கால்நடை மருத்துவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இலவச ஆடு, மாடு கோழிகளை உடனடியாக தேர்வு செய்து இந்த மாதம் பிப்ரவரிக்குள் திட்டத்தை நிறைவேற்ற அரசு எங்களை கட்டாயப்படுத்துகிறது. இத்திட்டம் செயல்படுத்துவது சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்குவது போன்று அரசு நினைக்கிறது. ஆடு, மாடுகள் கிடைப்பதில் பெரும் சிரமமாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான  கால்நடை மருத்துவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்’’ என்றனர்.

Tags : veterinarian ,suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...