×

பசுமை வீடுகள் திட்டத்தில் நிதியின்றி கட்டுமான பணிகள் முடக்கம்

மானாமதுரை, பிப்.7: பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் துவக்கப்பட்ட புதிய வீடுகள் கட்டும் பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் பயனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பயனாளிகள் கிராம ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு சொந்த இடத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி வீடுகட்டுவோர் பேஸ்மென்ட், காங்கிரீட், முழுப்பூச்சு என கட்டுமானத்தின் மூன்று கட்டங்களில் பணம் வழங்கப்படுகிறது.  சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் பசுமை வீடுகள் திட்டத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த அக்டோபர் மாதம் துவக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.இத்திட்டத்தின் கீழ் பணிகளை துவக்கியவர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்பட்ட தொகைக்கு பின் இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை தொகைகள் வழங்கப்படவில்லை. இதனால் கடன் வாங்கி கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட பயனாளிகள் கடன், வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து பசுமை வீடுகள் திட்ட பயனாளி ஒருவர் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டம் முழுவதும் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் வீடுகட்டும் பணியை துவக்கிய பயனாளிகள் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியால் கட்டுமானப்பணியை துவக்கினர். அரசால் வழங்கப்பட்ட சிமெண்ட், கம்பி தவிர செங்கல், மணல், கட்டுமானதொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றை செய்வதற்கு கந்துவட்டிக்கு பணம் வாங்கி பணிகளை முடித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை இதுவரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கந்துவட்டிக்காரர்கள் தொல்லையால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மானாமதுரை ஒன்றியத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிதிகளை முழுமையாக வழங்கவில்லை. இது குறித்து கேட்டால் மாவட்ட அலுவலகங்களில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் பணம் வழங்க முடியவில்லை என்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு