×

அம்பாத்துரையில் ‘பாராக’ செயல்படும் பழைய கட்டிடங்கள்

செம்பட்டி, பிப். 7: அம்பாத்துரையில் பழைய வருவாய் ஆய்வாளர், வேளாண் அலுவலர் கட்டிடங்களில் பகல், இரவு என பாராமல் குடிமகன்கள் குடித்து விட்டு கும்மாளமிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆத்தூர் தாலுகா, சின்னாளபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அம்பாத்துரையில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதுபோல் வேளாண் அலுவலர் குடியிருப்பு கட்டிடமும் கட்டப்பட்டது. தற்போது இடிந்த நிலையில் உள்ள இரு கட்டிடங்களை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கின்றன.  இதை சாதகமாக்கி கொண்டு சிலர் மதுவை வாங்கி கொண்டு இங்கு குடித்து கும்மாளமிடுகின்றனர். இரவு நேரங்களில் நடந்ததுபோய் தற்போது பகலிலே இவர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மாலை நேரங்களில் அருகேயுள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வேளாண் அலுவலர் கட்டிடம் அருகே காந்திகிராமத்தின் சிசுக்கள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதனருகேயும் புதர்மண்டி கிடப்பதால் விஷஜந்துகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்த நிலையில் உள்ள இந்த இரு கட்டிடங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் போலீசார் பெண்களை கேலி செய்யும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாத்துரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : buildings ,Paragala ,
× RELATED குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை