×

தக்கலையில் மேம்பாலம் அமைவதை கண்டித்து பேரணி- ஆர்ப்பாட்டம்

தக்கலை, பிப். 7: தக்கலையில் மேம்பாலம் அமைவதை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தக்கலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி குமரி வரும் பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆனால் தக்கலையில் மேம்பாலம் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேம்பாலம் அமைக்காமல் ஆக்ரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் மேம்பால திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் தக்கலையில் வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தக்கலை நகர வர்த்தகர் சங்கம், அனைத்து கட்சிகள், பொதுமக்கள் இணைந்து தக்கலை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ பேசியதாவது: மக்களுக்காக தான் அரசு செயல்பட வேண்டும். ஆனால் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது. மக்கள் நலன் பாதிக்காத வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இன்றைக்கு அப்படியா நடக்கிறது. நான்கு வழிச்சாலைக்காக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. வணிகர்களை அழிக்கும் திட்டமாக மேம்பால திட்டம் உள்ளது. தக்கலையில் மேம்பாலம் தேவையில்லை என நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தின் போது நாங்கள் மூன்று எம்எல்ஏக்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.

பிரின்ஸ் எம்எல்ஏ பேசுகையில், மத்திய அமைச்சர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. ஓகி புயலின் போது எங்கே இருந்தார் என தெரியவில்லை. இப்போது மேம்பாலம் கொண்டு வருவேன் என்கிறார். மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தினால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் நலனையும், வணிகர் நலனையும் கருத்தில் கொள்வதில்லை. அவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குகிறார். தற்போது தக்கலையில் மேம்பாலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? மேம்பாலம் அமைக்க ஒரு கல் கூட போட விடமாட்ேடாம். இவ்வாறு அவர் பேசினார்.மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ பேசியதாவது: கன்னியாகுமரியையும், திருவனந்தபுரத்தையும் இணைப்பதற்கு நான்கு வழிச்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புராதன நகரமான தக்கலை நகரத்தை அழிக்கும் விதத்தில் தக்கலை வழியாக இன்றைக்கு மேம்பாலம் கட்டுவோம் என மத்திய அமைச்சர் கூறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. நான்கு வழிச்சாலை வருகின்ற தருணத்தில் இந்த சாலையில் எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இருக்காது. அப்படி மேம்பாலம் கட்டப்படுமேயானால் இந்த பகுதியில் உள்ள வியாபாரம், பல்வேறு அலுவலகங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்துவிடும். இங்கிருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த மேம்பால பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் மூன்று எம்எல்ஏக்களும் வரும் சட்டமன்ற தொடரில் பெரிய பிரச்னையாக எழுப்ப இருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தக்கலை மணலி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்