×

நாமக்கல் மாவட்டத்தில் விவி பேட் குறித்து விழிப்புணர்வு பயிற்சி

நாமக்கல், பிப்.6: நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து, 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள ெபாதுமக்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிய பயிற்சி அளிக்க, ஒப்புகைச்சீட்டு வழங்கும் 160 மின்னணு இயந்திரங்கள் (விவிபேட்) அனுப்பி வைக்கப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசுத்துறை அதிகாரிகள் பல்வேறு பணிகளை ேமற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு முதல், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியுடன் கூடிய புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (விவி பேட்) பயன்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற வாக்குப்பதிவு இயந்திரம், கடந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்த புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து, தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம்(எஸ்.சி), சேந்தமங்கலம்(எஸ்.டி), பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13 லட்சத்து 77 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர்.  தேர்தல் பயன்பாட்டுக்காக நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் 2,141 கன்ட்ரோல் யூனிட், 3,933 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிவதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் 2,097 ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க, 160 ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். முதலில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.  தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Namakkal district ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...