×

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களில் விதிமுறை மீறல்

திருத்தணி, பிப். 6: திருத்தணி முருகன் கோயிலின் உப கோயில்களில் விதிமுறை மீறப்படுவதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக புகழ்பெற்ற  திருத்தலமாகும்.  இதன் உபகோயில்களாக மகிஷாசுரமர்த்தினி, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், பெரிய நாக பூண்டி, நாகேஸ்வரசுவாமி, திருத்தணியில் உள்ள  சுந்தரவிநாயகர் கோயில், நரசிம்மர் சுவாமி கோயில், நந்தி ஆற்றங்கரையில் உள்ள மற்ற கோட்டை ஆறுமுக சுவாமி கோயில், விஜயராகவ பெருமாள் கோயில், வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து வழிபடுவார்கள். ஆனால், உபகோயில்கள் அனைத்தும் நண்பகலில் மூடிவிடுவார்கள். இதனால்  நீண்டதூரம் பயணம் செய்து வரும் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.  

இதுகுறித்து தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோரிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அனைத்துக் கோயில்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து திறந்து இருக்கவேண்டும். பக்தர்கள் தங்கு தடையின்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் திருத்தணி நகரத்தில் உள்ள ேகாட்டைஆறுமுக சுவாமி கோயில் பகல் 12 மணிக்கு நடை சாத்தி விட்டு மாலை 5 மணிக்குத் தான் திறக்கின்றனர். இதனால் பகலில் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். அரக்கோணம் அருகே உள்ள குருராஜாபேட்டை கிராமத்திலிருந்து புதுமணத் தம்பதிகள் இக்கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த நேற்று வந்திருந்தனர்.  அவர்கள் கோயில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் வீடு திரும்பினர். எனவே, இனிவரும் காலங்களில் தக்கார், இணை ஆணையர் ஆகியோரின் உத்தரவை செயல்படுத்தவும், உப கோயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலி
யுறுத்தினர்.

Tags : Tiruttani Murugan Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் கோபுர கலசம் சேதம்