×

சூதாடிகளின் 6 லட்சத்தை சுருட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்


சென்னை: கிண்டி ஓட்டலில் சூதாடியவர்களின் ரூ.6 லட்சம் பணத்தை சுருட்டிய  இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். கிண்டி வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  பணம் கட்டி சிலர்  சூதாட்டம் ஆடுவதாக  கடந்த 2ம் தேதி நள்ளிரவில்  கிண்டி போலீசாருக்கு  ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர்   குமார்  அந்த ஓட்டலுக்குச் சென்று  அங்குள்ள ஒரு அறையில் திடீரென புகுந்து சோதனை செய்தபோது அங்கு  பல லட்சம் பணக்கட்டுகளுடன் 10க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல்  பிரமுகர்கள், தொழிலதிபர்கள்   பணத்தை கட்டி சூதாடியதை கையும், களவுமாக  பிடித்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். கதவு அருகே நின்ற இன்ஸ்பெக்டர் அவர்களை தப்பவிடாமல் தடுத்து பிடித்து அவருடன் வந்த எப்ஓபி  வாலிபர் உதவியுடன் சூதாட்டம் ஆடியவர்களின் பெயர் விலாசம் போன்றவற்றை ஒரு நோட்டில் பதிவு செய்தார். அப்போது அங்கிருந்த சிலர் தாங்கள் பெரிய பதவிகளில் இருப்பதால் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுங்கள் என கெஞ்சினர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட இன்ஸ்பெக்டர்    அங்கிருந்த பணத்தில் ரூ. 6 லட்சத்தை மட்டும்  எடுத்துக் கொண்டு நான்கைந்து பேரை மட்டும் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)  காவல்நிலையம் வரும்படியும் மற்றவர்களை அங்கிருந்து புறப்படும் படியும் கூறி அனுப்பியுள்ளார். அவர்களோ பணம் போனால் பரவாயில்லை.   தங்களை விட்டால் போதும் என ஓட்டம் பிடித்தனர்.   இன்ஸ்பெக்டர் சொன்னபடி அடுத்தநாள் (3ம்தேதி) சூதாட்டம் ஆடியவர்களில் ஜெகன் உள்பட, 4 பேர் கிண்டி காவல்நிலையம் சென்று   இன்ஸ்பெக்டர் குமாரிடம்  வழக்கை நாங்கள்  முடித்துக்கொள்கிறோம். தங்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.  ஆனால் இனஸ்பெக்டரோ,  ‘பணத்தை திருப்பியா கேட்கிறீர்கள்,  உங்களை வெளியே விட்டதே தப்பு’ என்று கூறி மரியாதையாக ஓடிவிடுங்கள் என விரட்டியுள்ளார்.  

இதனால் அவமானமடைந்த அந்த 4 பேரும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து  சூதாட்டத்தின் போது  எங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இன்ஸ்பெக்டர் கைப்பற்றிய ரூ. 6 லட்சம் பணத்தை பெற்றுத்தருமாறு கூறினர். இதனையடுத்து கமிஷனர் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் விஜயலட்சுமி,  இன்ஸ்பெக்டர் குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது நட்சத்திர ஓட்டலில் சூதாட்டம் ஆடியவர்கள் உயர்நிலையில் உள்ளதால்  வழக்கு பதிய வேண்டாம்  என கேட்டுக் கொண்டதால்,  வழக்கு பதியவில்லை என்றும், இந்த தகவலை உதவி கமிஷனருக்கும் தெரிவிக்கவில்லை என்றும்  கூறினார்.   இதனையடுத்து அவர் கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தார்.  போலீஸ் கமிஷனர்  விஸ்வநாதன், கிண்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் குமாரை ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : inspector ,gamblers ,Armed Forces ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு