×

குழித்துறையில் ஐகோர்ட் உத்தரவை மீறி காந்தி நினைவுநாளில் இயங்கிய தனியார் மதுபார் பொதுமக்கள் சாலை மறியல் - பெயர் பலகை அடித்து உடைப்பு

கருங்கல், பிப். 1: குழித்துறையில் மகாத்மா காந்தி நினைவு நாளில் தனியார் சொகுசு ஓட்டல் பாரில் மது விற்பனை செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனவரி 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மதுகடைகள், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களில் செயல்படும் மது பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டன.ஆனால் ஒரு சில இடங்களில் தனியார் பார்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்தது. குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி மதுபார் வசதியுடன் சொகுசு ஓட்டல் செயல்படுகிறது. இந்த பாரில் நேற்று முன்தினம் மது விற்பனை நடந்ததாக தெரிகிறது. இந்த தகவல் மதுபிரியர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான குடிமகன்கள் கார்களிலும், பைக்குகளிலும் ஓட்டலில் குவிந்தனர்.வழக்கத்திற்கு மாறாக அதிகபடியான கார்களும், பைக்குகளும் வந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் போதையில் வாகனங்களில் வேகமாக செல்லும் வாலிபர்களால் அந்த பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் சூழல் உருவானது.இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு சொகுசு ஓட்டலுக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மதுகுடிக்க வந்த வாகனங்களை மறித்து திருப்பி அனுப்பினர். சாலையில் பொதுமக்கள் திரண்டு தடுப்பு ஏற்படுத்தியதை அறிந்த ஓட்டல் நிர்வாகம் உடனடியாக பாரை மூடியது. என்றாலும் வாலிபர்கள் நள்ளிரவு 11 மணி வரை அங்கேயே அமர்ந்து காவல் காத்தனர்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பார் செயல்படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகள் ஏற்படுவதாக கூறி அங்கு வைத்திருந்த ஓட்டல் பெயர் பலகையை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : liquor brigades ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது