×

மணிமுத்தாறு தண்ணீர் கேட்டு மன்னர்புரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்

திசையன்விளை, ஜன. 31: வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் வழியாக மணிமுத்தாறு தண்ணீர் கேட்டு மன்னார்புரம் ஜங்சனில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்திற்கு மணிமுத்தாறு அணை தண்ணீர் 4வது ரீச் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பெரியகுளத்தின் கீழ் உள்ள குளங்களான ஏறாந்தை குளம், ராஜகோபாலபுரம் குளம், அழகனேரி குளம், மன்னார்புரம் குளம் ஆகிய குளங்களுக்கு பெரியகுளம் நடுமடை 15ஏ கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேரன்மகாதேவி சப்.கலெக்டர் ஆகாஷ் வடக்கு  விஜயநாராயணம் பெரியகுளம் நடுமடையை நேரில் பார்வையிட்டு அதன் வழியாக மேற்கண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று காலை மேற்கண்ட குளங்களை சார்ந்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற உடனடியாக வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நடுமடை 15ஏ வழியாக மணிமுத்தாறு அணை தண்ணீரை திறக்க வலியுறுத்தி மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் ராமசேகர், வானமாமலை, மான்சிங், முருகன், செந்தூர் மற்றும் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அனைவரையும் கைது செய்தார். அவர்கள் வாழைத்தோட்டம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags : Mannuthuram ,
× RELATED கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது