×

வாழையில் பரவும் பனாமா வாடல் தடுப்பு முறைகள் என்ன?

காரைக்குடி, ஜன. 24: வாழையில் பரவி வரும் பனாமா வாடல் நோயை தடுக்கும் முறைகள் குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், கீழச்சீவல்பட்டி, சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில் தற்போது பனாமா வாடல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் முறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் தெரிவிக்கையில்,‘‘பனாமா வாடல் நோய் பியூசேரியம் என்ற பூஞ்சான கிருமியால் பரவுகிறது. வெப்பம் குறைந்து, குளிர் அதிகமாக உள்ள நிலையில் மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும் போது பரவல் ஏற்படுகிறது. மண்ணில் நிலைகொண்டுள்ள பூஞ்சன வித்துக்கள் மூலம் பரவுகிறது.
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூஞ்சன வித்துக்கள் மண்ணில் உயிரோடு இருக்கும். அடிகிழங்கின் மூலம் உட்புகுந்து கருப்பு நிற வளையங்களை உருவாகி சைல திசுக்களை பாதிக்கும். வாழை தண்டிற்கும், இலைகளுக்கும் நீரை கடத்தும் திறனை அழித்துவிடும்.
இந்நோய் தாக்கம் வந்தவுடன் வாழையின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். நோய் முற்றிய நிலையில் அடித்தண்டு வெடிக்க ஆரம்பிக்கும். அடி இலைகளில் மஞ்சள் நிறம் பரவ ஆரம்பிக்கும் போதே தடுப்பு நடவடிக்கைள் எடுத்தால் கட்டுப்படுத்தலாம். மண்ணில் உள்ள பூஞ்சனங்கள் மேலும் பரவாமல் தடுக்க, ஒருமுறை பயிரிட்ட வாழைதோட்டத்தில் மீண்டும் வாழை பயிரிடக்கூடாது. எந்த வாழை ரகம் பயிரிட்டாலும் சாகுபடியின் போது அடியுரமாக 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். இரண்டரை கிலோ சூடோமோனாஸ் என்கிற எதிர்நன்செய் கிருமியை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடுவதற்கு முன்பாக குழிகளில் இட்டு நடவேண்டும். நோயின் தீவிரத்திலிருந்து குறைக்க டிரைகோடெர்மா விரிடி கலவையை வாழை கன்று ஒன்றுக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வாழைதூரின் ஈரமான பரப்பில் இடவேண்டும். நோய் தாக்கம் இருந்தால், கார்பன்டைசிம் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வாழை தூர் நனையும் படி ஊற்ற வேண்டும். அதேபோல் புரப்பிகோனசொல் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து வாழை கன்று ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். 50 கிராம் கார்பன்டைசிம் கேப்ஸ்யூல் மருந்தை வாழை அடிக்கிழங்கில் 10 செ.மீ துளையிட்டு வைக்கலாம்’’ என்றார்.


Tags : Panama Waist ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...