×

மறக்கப்பட்ட மாசாத்தியார் நினைவுத்தூண் ஆண்டுக்கணக்கில் பூட்டி கிடக்கிறது * தமிழ் ஆர்வலர்கள் கவலை

சிவகங்கை, ஜன.24: சிவகங்கை அருகே ஒக்கூரில் மாசாத்தியார் நினைவுத்தூண் கண்டுகொள்ளப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன், கனியன் பூங்குன்றனார் வரிசையில் சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவர் ஒக்கூர் மாசாத்தியார். சிவகங்கை ஒக்கூரில் பிறந்து வாழ்ந்தவர் மாசாத்தியார். சங்க காலத்தவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும்(பாடல்: 324, 384), குறுந்தொகையில் ஐந்தும்(பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275), புறநானூற்றில் ஒன்றும்(பாடல்: 279) என எட்டுப்பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. போருக்கு தன்னுடைய இளம்வயது மகனை அனுப்பிய பாடலை இயற்றிய மாசாத்தியார் தமிழரின் வீரம் பற்றிய புனைவியலுக்கு வித்திட்டவர்.
1989ம் ஆண்டு ஒக்கூரில், திருப்பத்தூர் செல்லும் சாலையோரத்தில் மாசாத்தியாருக்கு தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுத்தூணுக்கு அடிக்கல் நாட்டினார். 1991ம் ஆண்டு நினைவுத்தூண் திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.
இந்த நினைவுத்தூண் தமிழ் வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நினைவுத்தூண் உள்ள இடம் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு திறக்கப்படாமலேயே உள்ளது. மாசாத்தியாருக்கு உள்ள நினைவுத்தூண் இது என இப்பகுதியில் உள்ளவர்களுக்கே தெரியாத அளவிற்கு பராமரிப்பின்றியும், எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்தப்படாமலும் உள்ளது. நினைவுத்தூணை பராமரிக்கவும், அவரது நினைவை போற்றும் வகையில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நினைவுத்தூண் உள்ள கட்டிடம் முன் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் உள்ளே என்ன நினைவுத்தூண் இருக்கிறது என்பது கூட தெரியாத நிலை உள்ளது. பூட்டிக்கிடக்கும் நினைவுத்தூண் கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாசாத்தியார் வரலாற்றை அறிய இங்கு அழைத்து வர வேண்டும். அவரது நினைவை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். நினைவுத்தூணை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Forgotten Masathiyar Memorial ,activists ,Tamil ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு