×

ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக்கால் பள்ளிகளுக்கு பூட்டு- குமரியில் அரசு அலுவலகங்கள் முடங்கின

நாகர்கோவில், ஜன.24: ஜாக்டோ -ஜியோ 2ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 1122 பேர் கைது செய்யப்பட்டனர்.   தமிழகத்தில் 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலக அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களின்றி நேற்று கற்பித்தல் பணிகள் முடங்கின. பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்த போதிலும் வகுப்புகள் நடத்தப்படவில்லை. சத்துணவு பணியாளர், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு மாணவர்கள் வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர். நாகர்கோவிலில் கோட்டாறு ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளி, அனந்தநாடார்குடி அரசு உயர்நிலை பள்ளி ஆகியவற்றில் தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டன.இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர். இந்த பள்ளிகளில் செயல்பட்டு வருகின்ற சத்துணவு மையங்களுக்கும் பூட்டு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கல்வி மாவட்ட அலுவகங்களில் பணியாளர்கள் வருகை குறைவு காரணமாக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவு, வருவாய் துறை சார்ந்த அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. இதனால் இந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. தேர்தல் பிரிவு அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ சார்பில் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் ேபாராட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எட்வின் பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளை, சிவ ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஐவின் மறியல் ேபாராட்டத்தை துவக்கி வைத்தார். வருவாய் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், கோலப்பன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 375 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ெஹர்பர்ட் ராஜசிங் தலைமை வகித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திற்கு முன்பு தலைமையாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ஜோஸ் பென்சிகர் தலைமையில் மறியல் நடந்தது. அதனை தொடர்ந்து மறியலில் 334 பேர் கைது செய்யப்பட்டனர். ெமாத்தத்தில் மாவட்டத்தில் 3 இடங்களிலும் சேர்ந்த 700 பெண்கள் உள்பட 1122 பேர் கைது செய்யப்பட்டனர்.

காதில் பூச்சுற்றி எதிர்ப்பு

மறியலில் ஈடுபட வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னதாக கலெக்டர் அலுவலகத்தின் எதிரில் திரண்டு இருந்தனர். அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் காதில் பூ வைத்தும், பூச் சுற்றியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசின் செயல்பாடுகளை கண்டித்து தாங்கள் காதில் பூ வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தயாராக நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்
மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு வருவார்கள் என்பதால் அவர்கள் வர வர கைது செய்து அப்புறப்படுத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஆறு பஸ்களும் அந்த பகுதியில் வரிசையாக நிறுத்திவிடப்பட்டன. ஆனால் மறியல் போராட்டம் நடத்தப்பட்ட பின்னரே போலீசார் அவர்களை கைது செய்து அரசு பஸ்களில் அழைத்து சென்றனர்.

Tags : government offices ,schools ,Kumari ,Jacotto-Geo Strike ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...