×

மன்னார்குடி அருகே 4ம் சேத்தி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி, ஜன. 24: மன்னார்குடி அருகே 4 ம் சேத்தி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்  உடனே திறக்க கோரி விவசாயிகள் கீழப்பாலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் 4 ம் சேத்தி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல்கள்  பயிரிடப்பட்டிருந்தன. விவசாயிகள்  தற்போது தங்களது  வயல்களில் விளைந்த நெல்களை  தீவிரமாக அறுவடை செய்யும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகள் எளிதில் விற்பனை செய்ய வசதியாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் மன்னார்குடி துணை மண்டல அலுவலகம் சார்பில்  4ம் சேத்தி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் 4 ம் சேத்தி கிராமத்தில்  இந்த ஆண்டுக்கான நேரடி நெல்கொள்முதல் நிலையம் நேற்று வரை துவக்கப் படவில்லை. இதனால் நெல்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேத னையில் உள்ளனர்.இந்நிலையில் 4 ம் சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத் தை உடன் திறக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்யும் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை கண்டித்தும் அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில் குமார் தலைமையில் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் நேற்று மாலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அதன்படி 4 ம் சேத்தி கிராமத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக அதிகாரி இளங்கோவன் கொடுத்த உறுதியை ஏற்ற விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக  கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : paddy procurement center ,village ,Mannargudi ,Sethi ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...