×

நெல்லை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாலை மறியல்

ஆலங்குளம் ஜன.24: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கியது. வட்டார அளவில் நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர் போராட்டத்தில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோஜியோ சார்பில் நடந்த போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு பொறுப்பாளார்கள் நவமணி செல்லப்பாண்டியன், சுதர்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலங்குளம் வட்டார ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர்கள் சந்திரமோகன்,கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் வட்டார ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர்கள் கங்காதரன், ஆரோக்கியராசு ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆலங்குளம் டிஎஸ்பி தர்(பொறுப்பு) தலைமையில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன்,ஊத்துமலை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, ஆலங்குளம் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட  ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த 168 பெண்கள் மற்றும் 64 ஆண்கள் என 232 பேரை கைது செய்தனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில்  விடுவித்தனர். இந்த சாலை மறியலில் பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:  சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஜாக்டோஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார செயலாளர் ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா, வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி குருவையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி, கடையநல்லூர் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திரளான சாலை மறியலில் பங்கேற்றனர்.  இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச் செயலாளர் மருதுபாண்டியன், அரசு ஊழியர் சங்க வட்டார பொறுப்பாளர் ராஜூ, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் குமார், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி, சத்துணவு ஊழியர் சங்கபொறுப்பாளர் வாஞ்சி மைதீன், அரசு உதவிபெறும் பள்ளிகள் சங்க நிர்வாகி பாலு உள்பட  305 பேரை போலீசார் கைது செய்தனர். புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் குமார்(சிவகிரி), அந்தோணி (வாசுதேவநல்லூர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் நடந்த மறியல் பேராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மைதீன்பட்டாணி, பால்ராஜ், திருமலைமுருகன், லூக்காஸ், சிவகுமார், ராமராஜ் தலைமை வகித்தனர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிமேகலை, நாராயணன், கருப்பசாமி, ராமசாமி, ராசையா, ராஜேஷ், பீட்டர், ராஜேந்திரன், விஜயராணி, ராமர், இளங்கோ கண்ணன், மோகன்ராஜ், வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியூறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வட்டசெயலாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 283 பெண்கள் உள்பட443 பேரை சங்கரன்கோவில் டவுண் போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், பாலாஜி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி:  நாங்குநேரியில் ஜாக்டோஜியோ சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் நாங்குநேரி ராதாபுரம் தாலுகாக்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நாங்குநேரி பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட ஜாக்டோஜியோ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் 134பேரும் ஆண்கள் 71 பேர் என  மொத்தம் 205 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
கடையம்:  அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஜாக்டோஜியோ மறியல் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ரத்தினவேல் தலைமை வகித்தனர். மூட்டா ராஜசேகரன், நகர பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் அல்லாப்பிச்சை, சத்துணவு ஊழியர்கள் சங்கம் பிச்சுமணி, ஆசிரியர்கள் சங்கம் கமலேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்  மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஜாஹிர் ஹூசைன் தலைமையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்கள் பிரதாபன், கவுரி மனோகரி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 145 பெண்கள் உள்பட 160 பேரை கைது செய்தனர்.

தென்காசி:  தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் துரைசிங், மேல்நிலை முதுநிலை பட்டதாரி கழகம் முருகன் தலைமை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கிருபாசங்கர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாரியப்பன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஜெனட்,

அரசு ஊழியர் சங்கம் மல்லிகா, ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி அபிசரவணன், பொதுசுகாதாரத்துறை ரகுபதி, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சங்கம் ஜெயராஜ், அங்கன்வாடி சங்கம் கிருஷ்ணமணி, தாயம்மாள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் முருகையா,  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முத்துராஜ், பொன்மலர், காளிராஜ், செல்வகுமார், பிரதீப்குமார், அகத்தியன், மருதுபாண்டியன், முருகம்மாள், மாடத்தி, மாணிக்கவாசகம் மற்றும் 550 பெண்கள் உட்பட 750 பேரை புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சல்குமார், சரஸ்வதி, சப்இன்ஸ்பெக்டர்கள் வேல்பாண்டி, சின்னத்துரை, மாரிச்செல்வி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags : NELA DISTRICT ,
× RELATED களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு