×

முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை வலியுறுத்தி 4ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்

ஆம்பூர், ஜன. 24: முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை வலியுறுத்தி டெல்லியைச் சேர்ந்த 70 வயது முதியவர் 4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு நேற்று ஆம்பூர் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்கு டெல்லியைச் சேர்ந்தவர் ஹரி பாஸ்கரன்(70). இவர் பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உதவி செயல் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், முதியவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை வலியுறுத்தி ஹெல்ப் ஏஜ் இந்தியா மூலம் இவர் சென்னையில் இருந்து டெல்லி வரையிலான 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடக்க முடிவு செய்தார்.

இதையொட்டி, கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். காஞ்சிபுரம், வேலூர் வழியாக நேற்று மாலை ஆம்பூர் வந்த ஹரி பாஸ்கரனுக்கு பல்வேறு தரப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஓய்வு பெற்ற பின் பலர் தங்களது வாழ்வில் மகிழ்ச்சி என்பதை பல்வேறு காரணங்களால் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கவும், தற்போதைய தலைமுறையினர் முதியவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி காத்திட வலியுறுத்தியும் சைக்கிள் பயணத்தில் பிரசாரம் செய்து வருகிறேன். வரும் 2025ம் ஆண்டு இந்தியாவில் 150 மில்லியன் முதியவர்கள் இருக்கக்கூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முதியோர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும். சென்னையிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இரண்டு மாத காலத்திற்கு பிறகு டெல்லி அடைய திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் சுமார் 40 முதல் 70 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இலக்கை நிர்ணயித்து பயணம் செய்து வருகிறேன்’ என்றார்.

Tags : cycle tours ,elderly ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...