×

செங்குளம் துவக்க பள்ளியில் ஆசிரியர் இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தான்குளம், ஜன. 23: சாத்தான்குளம்  அருகே செங்குளத்தில் இரு ஆசிரியர்களுடன் செயல்படும்  ஒன்றிய துவக்க பள்ளியில் ஒரு ஆசிரியர் இடமாற்றத்திற்கு கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே ஆழ்வார்திருநகரி  ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில்  ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு  வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் பணியாற்றி  வருகின்றனர். இதனிடேயே மாநில கல்வி அமைச்சர் செங்கோட்டையன் குறைவாக மாணவர்கள் உள்ள  பள்ளிகளில் ஆசிரியர்களின் விகிதாசாரம் குறைக்கப்படுவர் என  தெரிவித்திருந்தார். அதன்படி இப்பள்ளி ஓராசிரியர் பள்ளியாக மாற்ற முடிவுசெய்யப்பட்டு இங்கு பணியாற்றும் ஒரு ஆசிரியரை மட்டும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய  உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கூறுகையில்,  ‘‘செங்குளம் கிராமத்தில்  சுமார் 120 குடும்பங்கள் ஆதிதிராவிட பட்டியல்  வகுப்பைச்சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்  இந்த ஊரில் ஆரம்ப கவ்வி எட்டாத கனியாக இருந்தது.இந்த கிராமத்தின் ஆரம்ப  கல்வி இம்மக்களின் தொடர் முயற்சியால் கடந்த 2005ம் ஆண்டு காப்புறுதி பள்ளி  1ம், 2ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 2006 ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்க  பள்ளியாக உயர்த்தப்பட்டது.அதன் பிறகு 2006 ம் ஆண்டிலேயே சத்துணவு  வழங்கப்பட்டுள்ளது. பள்ளி ஆரம்ப நிலையில் மாணவர்கள் இப்பள்யில்  30க்கு  மேற்பட்ட மாணவர்களே கல்வி பயின்று வருகின்றனர்.ஆரம்ப நிலையில்  இருந்து இந்நாள் வரை இரு ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். தற்போது  ஆரம்ப கல்வி இப்போதுதான் முறையாக கிடைக்கும் நேரத்தில் அதிகாரிகள் திடீரென  ஒரு ஆசிரியரை மாற்றி ஓராசிரியர் பள்ளியாக மாற்றம் செய்ய  தேர்வு  செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின்  கல்வித் தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் அரசு இந்த பள்ளியில் உள்ள  ஆசிரியரை மாற்றம் செய்வதை  கைவிட வேண்டும். வாய்ப்பு வசதி,  அருகாமையில் பள்ளி இல்லாத இது போன்ற ஏழை எளிய மக்கள் வசிக்க கூடிய கிராம  பள்ளிகளுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். செங்குளம் ஊராட்சி ஒன்றிய  துவக்க பள்ளியில் இரு ஆசிரியர் இருந்து குழந்தைகளுக்கு தரமான கல்வியை தர  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Sengulam Primary School ,
× RELATED போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு