×

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சிட்டிக்குள் எவ்வளவு ஸ்பீடுல போகணும்?

மதுரை, ஜன.22: மதுரை நகரில் விபத்தை குறைக்கும் வகையில் வாகனங்களின் வேகத்தின் அளவு நிர்ணயம் செய்து கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி, மதுரையிலுள்ள அனைத்து சாலைகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் விபத்துகளை குறைக்கும் வகையில் வாகனங்களின் வேக அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையினர் அடங்கிய குழு கூட்டத்தில் விவாதித்து முதல்கட்டமாக மதுரை நகருக்குள் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மதுரை நகருக்குள் வாகனங்கள் எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான விபரங்களை மாவட்ட அரசிதழில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகளில் அதிகபட்சம் 30 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். வெளி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் முதல் காளவாசல் மற்றும் பழங்காநத்தம் வரையிலும், விளக்கு தூண் முதல் விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு வரையிலும் அதிகபட்சம் 40 கி.மீ. வேகத்தில் செல்லலாம். காளவாசல் முதல் அச்சம்பத்து வரை, கோரிப்பாளையம் முதல் பாத்திமா கல்லூரி மற்றும் கோ.புதூர் வரையிலும், பாண்டியன் ஓட்டல் முதல் ஊமச்சிகுளம் வரையிலும், அவுட்போஸ்ட் முதல் மீனாட்சிமிஷன் மருத்துவமனை வரையிலும் அதிகபட்சம் 40 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

இதுபோலவே, கோரிப்பாளையம்-அண்ணா நிலையம்- மேலமடை - விக்ரம் மருத்துவமனை வரை, கே.கே.நகர் காய்கறி மார்க்கெட் முதல் தெப்பக்குளம் வரையிலும், கே.கே.நகர் ஆர்ச் முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரையிலும், பெரியார் பேருந்து நிலையம் முதல் அவனியாபுரம் வரையிலும் அதிகபட்சம் 40 கி.மீ. வேகத்தில் செல்லலாம். பழங்காநத்தம் முதல் தனக்கன்குளம் நான்கு வழிச்சாலை வரையிலும், காளவாசல் முதல் சமயநல்லூர் நான்கு வழிச்சாலை வரையிலும், பாத்திமா கல்லூரி முதல் சிக்கந்தர் சாவடி வரையிலும், முடக்கு சாலை முதல் துவரிமான் நான்கு வழிச்சாலை வரையிலும், அவனியாபுரம் முதல் மண்டேலா நகர் வரையிலும் அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் செல்லலாம். மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரிங்ரோடு முதல் கப்பலூர் வரை அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இந்த வேக கட்டுப்பாடு தற்போது அமலில் உள்ளது.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்