×

மருதமலை சுப்பிரமணியர் கோயிலில் தேரோட்டம்

மருதமலை,ஜன.22: கோவை அருகே மருதமலை சுப்பிரமணியசுவாமி  கோவிலில் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. நேற்றுமுன் மாலை தங்கமயில் வாகன காட்சியும், இரவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை  கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். பின் ஆதிமூலஸ்தனம் முன் உள்ள மண்டபத்தில்  முருகப்பெருமான் வெண்பட்டு உடுத்தியும், தெய்வானை பச்சை பட்டு உடுத்தியும், வள்ளி ரோஸ் நிற பட்டால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு எழுந்தருளினர்.

சிவாச்சாரியார்களுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானைக்கு மங்கள நாண் சூட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, மருதமலை முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். உரல் இடித்து பொற்சுண்ணம் பாடல் ஓதுவார் பாடினார். பின்னர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின் திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். அதனை தொடர்ந்து வீரபாகு, விநாயகர் தேர் முன் செல்ல பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். நிகழ்ச்சியை பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் துவக்கிவைத்தார்.

இதில் கோவை அல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 6 பேருந்துகளும், கோவில் நிர்வாகம் சார்பில் 3 பேருந்துகளும் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டது. பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் மேனகா, பேரூர் டி.எஸ்.பி வேல்முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சோமனூர்: கருமத்தம்பட்டி அருகே விராலிக்காட்டில் உள்ள சென்னியாண்டவர் கோயிலில் தைப்பூச தோரோட்டம் நடந்தது. சென்னியாண்டவர் கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. காலை 4 மணி சுவாமிக்கு அபிஷேகம், திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.  சுற்றுவட்டார பகுதில் உள்ள வஞ்சிபாளையம், தெக்கலூர், அவிநாசி, வடுகபாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், கணியூர், ஊஞ்சப்பாளையம், செந்தில்நகர், கருவேலாங்காடு, எலச்சிபாளையம், உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீர்த்தகாவடி, பால்காவடி, மயில்காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்தனர். இதில் கோயில் நிர்வாகிகள் தலைமையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  இரவு கலைநிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தது.

சூலூர்: சூலூரை அடுத்த சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை  மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் செஞ்சேரி மந்திரகிரி  வேலாயுதசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு  காட்சியளித்தார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், கோயில் செயல் அலுவலர் தீபா, கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன்,ஆய்வாளர் தங்கராஜ், சுல்தான்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.  விழாவில் ஏராளமான  பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Maruthamalai Subramaniam Temple ,
× RELATED இந்திய ஸ்கேட்டிங் அணிக்கு கோவை மாணவர் தேர்வு