×

முத்துப்பேட்டை அருகே ரயில்வே நிர்வாகத்தினர் அமைக்கும் சாலை பணியை தடுத்து இடையூறு

முத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை அருகே காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியான உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் அருகில் சாலை அமைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வந்தனர். இதில் ரயில்வே கேட்டிலிருந்து நாச்சிக்குளம் பள்ளிவாசல் பகுதிக்கு செல்லும் சாலை பிரிவு இடத்தில் சாலை பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது அங்கு ஏற்கனவே ஆக்கிரமித்து கடை கட்டியிருந்த நபர் ஒருவர் இது எனது இடம் என்று குறுக்கீட்டு பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த சாலை பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நாச்சிக்குளம் பகுதிக்கு செல்லும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள் செல்ல மிக இடையூறாக உள்ளது. அதேபோல் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அப்பகுதி ஜமாஅத்  சார்பில் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து சாலை பணியை தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.  அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட்டில் இருந்து நாச்சிகுளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை ரயில்வே கேட் உயர்த்தப்படுவதால் தாழ்வாக உள்ளது. இந்த கிராம சாலையை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் முயற்சித்தபோது அப்பகுதியில் ஏற்கனவே கடை நடத்தி வரும் நபர் சாலையை சரி செய்யவிடாமல் தடுத்துள்ளார். மேலும் அப்பகுதி சாலை குறுக்கே பெரியளவிலான கற்களை சாலை குறுக்கே போட்டு வைத்துள்ளார்.
இதனால் நாச்சிகுளம் கிராமத்திற்குள் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊர் மக்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், சாலையை சரிபடுத்த அவர் அனுமதிக்கவில்லை.
எனவே சாலை அமைக்க இடைஞ்சலாக உள்ள நபரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : railway executives ,Muttappettu ,
× RELATED முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம்...