×

தூத்துக்குடி போலீசில் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டம் அறிமுகம் எஸ்பி முரளிராம்பா தகவல்

தூத்துக்குடி,ஜன.10: போலீசாரிடம் இருந்து பெறப்படும் வேலை மற்றும் தனிநபர் நன்னடத்தை சான்றுகள் தொடர்பாக, காவல் துறை அறிமுகம் செய்துள்ள புதிய இணைய வழி சேவையை எஸ்பி முரளிராம்பா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போலீசாரிடம் இருந்து பெரும் நன்னடத்தை சான்றுக்காக  பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.inஎன்ற இணையதளத்தில்  சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.தனிநபர் விவரம் சரிபார்த்தல், வேலை நிமித்தமாக சரிபார்த்தல், வாடகைதாரரின் விவரம் சரிபார்த்தல், வீட்டு வேலையாள்கள் விவரம் சரிபார்த்தல் போன்ற  சேவைகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ.500, தனியார் நிறுவனங்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு, இணையவழி வங்கி சேவை ஆகிய முறைகளில் இக்கட்டணத்தை செலுத்தலாம்.இந்த நன்னடதை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய ஒருவரின் தற்போதைய வீட்டுமுகவரி, காவல்துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும்.

தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் காவல் முன்நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். இந்த  சேவைக்காக பொதுமக்கள்  இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள், அதற்கான விளக்கங்கள் தமிழ், ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம்.  விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள், ஆவணங்களில் குறைகள் இருந்தால்  விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல்துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.

Tags : Introduction ,Tuticorin Police ,
× RELATED தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல்...