×

தனி நபர்களை பற்றி அறியலாம் காவல்துறை சரிபார்ப்பு சேவை துவக்கம்

கடலூர், ஜன. 10: தமிழக காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை சரிபார்ப்பு சேவையை கடலூரில் எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்தார்.காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற ஒரு புதிய இணையவழி சேவையை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  www.eservices tnpolice gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு மேற்படி சேவையை பயன்படுத்த தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5000 மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருவிண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.

இந்த சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனி நபர் ஒருவரின் தற்போதைய முகவரி, மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன்நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரிடையாக செல்ல வேண்டிய அவசியமில்லை. பொது மக்கள், தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள OR குறியீட்டினை ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள “சரிபார்ப்பு” என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளலாம். பிவிஆர் எண்ணை பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னாட்டம் (feedback) என்ற பகுதியை பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர ஆணையர் மற்றும் சென்னை மாநகர இணை ஆணையர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தொகை திருப்பிஅளிக்கப்பட மாட்டாது. மேலும், காவல்துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்த சேவையை கடலூரில் மாவட்ட எஸ்பி சரவணன் துவக்கி வைத்தார். மேலும் சேவை தொடர்பாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணியை மேற்கொண்டார்.

Tags : individuals ,Police Checker Launch ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!