×

மின் கம்பத்தை மாற்றி அமைக்காததால் ஒரு ஆண்டாக இருளில் தவிக்கும் மக்கள் படியூர் அருகே அவலம்

காங்கயம், ஜன. 9:  காங்கயம் அருகே உடைந்த விழுந்த மின் கம்பத்திற்கு பதிலாக வேறு மின் கம்பம் அமைக்காததால், அப்பகுதி மக்கள் கடந்த ஒரு ஆண்டாக மின்சார வசதி இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.   காங்கயம் ஒன்றியம், படியூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில்  கணபதிபாளையம் உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட சிவகிரி புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடைந்த விழுந்தது. இதையறிந்த மின்வாரியத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையாக மின் இணைப்பைத் துண்டித்து விட்டு சென்றனர். அதன் பின்னர், ஒரு ஆண்டு ஆகியும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக மாற்று மின் கம்பம் அமைக்கவில்லை. இதனால் இந்த மின் கம்பத்தில் இருந்து மின் விநியோகம் பெற்று வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த ஒரு ஆண்டாக மின்சாரம் இல்லாமல், தவித்து வருகின்றனர்.

 குடிநீர் பிரச்னை: மேலும் மின் கம்பம் விழுந்த பகுதியில் உள்ள கிணற்றில் சுமார் 25 ஆண்டுக்கு முன்பு தண்ணீர் இருந்துள்ளது. அதனை இப்பகுதி மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால், அக்கம்பக்கத்தில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, பயன்படுத்தி வருகின்றனர்.  இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு குடியிருந்து வரும் மக்களில் சிலர் அருகே உள்ள பழனியப்பா நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.  எனவே, மின் வாரிய துறையினர் கிணற்றின் மீது விழுந்து கிடக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைத்து மின் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
இதே போல் 80 ஆடி ஆழமுள்ள கிணற்றுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : power pad ,Padiyur ,
× RELATED காங்கேயம் படியூரில் 24ம் தேதி மேற்கு...